
அஜித் குமாருக்கு கலைப் பிரிவில் 2025-ம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, அது தொடர்பாக அவர் நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டு, பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று (ஜன.25) அறிவிக்கப்பட்டன. தமிழகத்திலிருந்து கலைப் பிரிவில் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக தன் மேலாளர் சுரேஷ் சந்திராவின் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிடப்பட்டுள்ள அஜித் குமாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
`இந்திய குடியரசுத் தலைவரிடம் இருந்து பெருமைக்குரிய பத்ம விருதைப் பெறவிருப்பதை எண்ணி நான் பெருமையடைகிறேன்.
இந்த கௌரவத்தை வழங்கியதற்காக மேதகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அங்கீகாரம் தனிப்பட்ட வகையில் மட்டுமல்லாமல், பலரது கூட்டு முயற்சிக்கும், ஆதரவுக்கும் சேர்த்தே கிடைத்துள்ளது என்பதை நான் உணர்கிறேன்.
திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு எனது பயணத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
எனது மனைவியாகவும், உற்ற துணையாகவும் ஏறத்தாழ 25 அற்புதமான ஆண்டுகளை கழித்த ஷாலினிக்கு: உன் துணை எனது வெற்றியின் அடித்தளமாக உள்ளது.
குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோருக்கு: எனது வாழ்வின் ஒளியாகவும், பெருமையாகவும் நீங்கள் இருக்கின்றீர்கள்.
கடைசியாக, எனது ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு: உங்களின் அசைக்க முடியாத அன்பும், ஆதரவும் எனது ஆர்வத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் தூண்டுகோலாக உள்ளன. இந்த விருது எனக்கு மட்டுமல்லாமல், உங்களுக்கும் சொந்தமானது.
இந்த கௌரவம் மற்றும் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி’ என்றார்.