
துபாய் 24ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் ஒரு போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என அஜித் குமார் முடிவெடுத்துள்ளார்.
அஜித் குமார் ரேஸிங் அணியைத் தொடங்கியுள்ள அஜித் குமார் துபாய் 24ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் அணி உரிமையாளர் மற்றும் ஓட்டுநராகப் பங்கேற்கிறார். இதற்கான பயிற்சியின்போது அஜித் குமாரின் கார் இரு நாள்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது. அஜித் குமாருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், விபத்து ஏற்பட்டதன் காரணமாக துபாய் 24ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் அணியின் நலன் கருதி போர்ஷ் 992 கப் கார் போட்டியிலிருந்து அஜித் குமார் விலகியுள்ளார். எனினும், இவருடைய அணி இந்தப் போட்டியில் பங்கேற்கிறது. உரிமையாளராக இந்தப் போட்டியில் அஜித் குமார் நீடிக்கிறார்.
அதே வேளையில் போர்ஷ் கேமேன் ஜிடி4 (எண் 414) போட்டியில் அஜித் குமார் ஓட்டுநராகவும் பங்கேற்கிறார்.
அஜித் குமாரின் முடிவை போட்டி ஏற்பாட்டாளர்கள் ஆதரித்து ஊக்கப்படுத்தியுள்ளதாக அஜித் குமார் ரேஸிங் அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.