
அஜித் நல்ல நடிகர் என்றும் அவர் சோகத்தை வெளிப்படுத்தும்போது, உங்களால் அதை உணர முடியும் என ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.
டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனலில் சித்ரா லட்சுமணன் நேர்காணல் நிகழ்ச்சியில் ராஜீவ் மேனன் கலந்துகொண்டார். சித்ரா லட்சுமணனுடனான உரையாடலில் பல்வேறு அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார். அப்போது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துடன் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு, அவருடைய நடிப்புத் திறன் பற்றி ராஜீவ் மேனன் விளக்கினார்.
"அஜித்துடன் பணியாற்றுவதை நான் விரும்புவேன். அவர் மிகச் சிறந்த நடிகர். அழகான தோற்றமுடையவராக இருந்தாலும், வேதனையை நன்றாக வெளிப்படுத்துவார்.
நல்ல தோற்றமுடைய நிறைய ஆண்கள் நல்ல நடிகர்கள் ஆனதில்லை. காரணம், அவர்களிடத்திலிருந்து சோகம் வெளிப்படாது. கமல் இந்த விஷயத்தில் கடின உழைப்பைச் செலுத்தியுள்ளார். நல்ல தோற்றம் உடையவராக இருந்தாலும், அவரால் சோகத்தை வெளிப்படுத்த முடிந்தது.
பொதுவாக, நல்ல தோற்றமுடையவர்கள் சோகத்தை வெளிப்படுத்தும்போது, அவர்களுக்கு சோகம் உள்ளது என்பதை உங்களால் நம்ப முடியாது. அதுவே அஜித் சோகத்தை வெளிப்படுத்தினால் அதை உங்களால் உணர முடியும். அவர் நல்ல நடிகர்" என்றார் ராஜீவ் மேனன்.