சுவிட்ஸர்லாந்து அமைதி மாநாடு: பிரகடனத்தில் கையெழுத்திடாத இந்தியா!

உக்ரைன், ரஷ்யா என இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் முன்மொழிவுகள் மட்டுமே அமைதிக்கு வழிவகுக்கும்
சுவிட்ஸர்லாந்து அமைதி மாநாடு: பிரகடனத்தில் கையெழுத்திடாத இந்தியா!
1 min read

உக்ரைன், ரஷ்யா இடையே அமைதி நிலவ வழிவகை செய்யும் அமைதி மாநாடு, சுவிட்ஸர்லாந்தின் பர்கென்ஸ்டாக்கில் ஜூன் 15, 16-ல் நடந்தது. மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அமைதி பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை.

`உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள இந்தப் போரால் அதிக அளவில் மனிதர்கள் பாதிக்கப்பட்டு, பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகள், உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சிறை பிடிக்கப்பட்டுள்ள போர்க் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். சட்டவிரோதமாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள உக்ரைனைச் சேர்ந்த குழந்தைகளை ரஷ்யா விடுவிக்க வேண்டும்’ என அமைதி பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினரின் அணுகுமுறைகள், திட்டங்கள், வாய்ப்புகள் போன்றவற்றைத் தெரிந்து கொண்டு, அதை வைத்து உக்ரைன், ரஷ்யா என இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்படும் முன்மொழிவுகள் மட்டுமே அங்கே அமைதிக்கு வழிவகுக்கும்’ என இந்த மாநாட்டில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி பவன் கபூர் கருத்து தெரிவுத்தார்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்த அமைதி மாநாட்டில் பங்கேற்றார். `போர் நிறுத்தம் மேற்கொள்ளும் வகையில் இரண்டாவது முறையாக அமைதி மாநாடு நடப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது’ என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டுக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைக்கப்படாதது குறித்த கேள்விக்கு, `இருதரப்புக்கும் இடையில் அமைதி நிலவ வருங்காலத்தில் நடக்கும் மாநாடுகளில் ரஷ்யா இணைந்து கொள்ளலாம்’ என மாநாட்டை ஏற்பாடு செய்த சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்தது.

இந்தியாவைப் போல, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து, இந்தோனேசியா, மெக்சிகோ, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இந்த அமைதிப் பிரகடனத்தில் கையெழுத்திடவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவளித்து அமைதி மாநாட்டை சீனா புறக்கணித்தது குறித்து, மாநாட்டில் பங்கேற்றப் பல உலக நாடுகளின் தலைவர்கள், கவலை தெரிவித்தனர்.

பிப்ரவரி 2022-ல் தொடங்கி கடந்த 28 மாதங்களாக ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கு இடையே போர் நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஐந்தில் இரு பங்கு உக்ரைன் நிலத்தை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in