
ரோஹிங்கியாக்களுக்கு உதவிடும் வகையிலான `மனிதாபிமான வழித்தட’ விவகாரத்தில் பின்னடைவைச் சந்தித்த நிலையில், வங்கதேச மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பொறுப்பில் இருந்து முஹமது யூனுஸ் ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரின் ராக்ஹீன் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையின ரோஹிங்கியா மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக, வங்கதேசத்தின் சட்டோகிராமில் இருந்து, `மனிதநேய வழித்தடம்' அமைப்பதற்கான முன்னெடுப்பை வங்கதேச இடைக்கால அரசு தொடங்கியது.
அமெரிக்காவின் ஆலோசனையின்பேரில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தால் வங்கதேசத்தின் இறையாண்மை பாதிக்கப்படும் என்று உள்நாட்டில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதை ஒட்டி, திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச ராணுவத் தளபதி வக்கேர்-உஸ்-ஸமான் கடுமையான எச்சரிக்கையை அரசுக்கு விடுத்தார்.
மேலும், பிரதான கட்சியான `பங்களாதேஷ் தேசியவாத கட்சியும்’ நேற்று (மே 22) போராட்டங்களை முன்னெடுத்தது. இதனால் மனிதநேய வழித்தட விவகாரத்தில் வங்கதேச அரசு பின்வாங்கியது.
அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இடைக்கால அரசுக்கு ராணுவத் தளபதி அழுத்தம் கொடுத்து வருகிறார். அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டால், புதிய அரசு அமைந்தவுடன் தற்போது யூனூஸ் வசம் இருக்கும் அதிகாரம் முடிவுக்கு வந்துவிடும்.
இவ்வாறு பல்வேறு விவகாரங்களில் நெருக்கடி முற்றிய நிலையில், பதவியை ராஜினாமா செய்யப்போவதாக யூனுஸ் தெரிவித்தாக அந்நாட்டில் இன்று (மே 23) காலை முதலே தகவல் பரவத் தொடங்கியது. இதனால், வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த கையோடு இராணுவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் வகையில் தலைநகர் டாக்காவில் மாணவர் தலைவர்கள் இளைஞர்களை திரட்டி வருகின்றனர்.
கடந்தாண்டு உச்சத்தை எட்டிய மாணவர்கள் போராட்டத்திற்கு பிறகு, ஆகஸ்ட் 5-ல் அன்றைய பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறினார். இதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட இடைக்கால அரசின் தலைமைப் பொறுப்பில் யூனுஸ் அமர்த்தப்பட்டார்.
இந்நிலையில், தற்போது இடைக்கால அரசுக்கு எழுந்துள்ள நெருக்கடியை அடுத்து, இத்தகைய சூழ்நிலையில் பணியாற்ற முடியாத நிலையில் இருப்பதாக கூறி பதவியை அவர் ராஜினாமா செய்யப்போவதாகத் தெரிவித்தாக பிபிசி பங்களா செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் போராட்டம் வெடிக்கும் சூழலில், மீண்டும் ஒரு முறை வங்கதேசம் சிக்கியுள்ளது.