
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதாலும், இந்தியா - அமெரிக்கா இடையே நீண்டகாலமாக நிலவும் வர்த்தகத்திற்கான கட்டுப்பாடுகள் காரணமாகவும் இந்தியா மீது வரி விதிப்பு அதிகரிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது. 15% முதல் 20% வரை வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரி 25% என அதிபர் டிரம்ப் கடந்த ஜூலை 31 அன்று அறிவித்தார். இது ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. பிறகு, ஆகஸ்ட் 7 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்தியா மீது மேலும் 25% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. இது ஆகஸ்ட் 21 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர் ஒருவர் இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏன் என டொனால்ட் டிரம்பிடம் கேள்வியெழுப்பியுள்ளார். "சீனாவைப் போல வேறு சில நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகின்றன, அப்படி இருக்கையில் இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏன் என்று செய்தியாளர் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த டிரம்ப், " 8 மணி நேரமே ஆகியுள்ளது. என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள். பல இரண்டாம் நிலை வரி விதிப்புகளைப் பார்க்கப் போகிறீர்கள்" என்றார்.
Donald Trump | US President Donald Trump |