
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஏமன் நாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வரும், கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு அதிபர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, ஏமன் நாட்டில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். 2014-ல் ஏமனில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவரின் உதவியுடன் 2015-ல் ஏமன் தலைநகர் சனாவில் தனியார் கிளினிக் ஒன்றைத் தொடங்கியுள்ளார் நிமிஷா பிரியா.
ஏமன் நாட்டுச் சட்டப்படி, அந்நாட்டுக் குடிமக்கள் மட்டுமே அங்கே (கிளினிக் உள்ளிட்ட) தொழில்களில் ஈடுபடமுடியும். இதனால் மஹ்தியின் உதவியுடன் கிளினிக்கைத் தொடங்கியுள்ளார் நிமிஷா. ஒரு கட்டத்தில், கிளினிக்கில் கிடைத்த வருமானத்தில் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டு, நிமிஷாவைத் தன் மனைவி எனப் பிறரிடம் கூறியது மட்டுமல்லாமல் அவ்வப்போது அவரிடம் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளார் மஹ்தி. மேலும், நிமிஷாவின் பாஸ்போர்ட்டும் மஹ்தி வசம் இருந்தது.
இதனால், அவரிடம் இருந்து தப்பிக்கும் வகையில் கடந்த 2017-ல், ஊசி மூலம் மஹ்திக்கு மயக்க மருந்து செலுத்தியுள்ளார் நிமிஷா. ஆனால் இதில் மஹ்தி உயிரிழந்தார். இதனையடுத்து, நிமிஷா பிரியாவை ஏமன் காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இதைத் தொடர்ந்து மஹ்தியைக் கொலை செய்ததற்காக, 2018-ல் நிமிஷா ப்ரியாவிற்கு மரண தண்டனை வழங்கியது ஏமன் நாட்டு நீதிமன்றம்.
இந்நிலையில், நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் ரஷாத் அல் அலிமி சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி அடுத்த ஒரு மாத காலத்துக்குள் நிமிஷாவின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடப்பாண்டின் தொடக்கத்தில் ஏமன் சென்றுள்ள நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, அங்கிருந்தபடி தன் மகளை விடுவிக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
`நிமிஷா பிரியாவை மீட்க அவரது குடும்பத்தினர் அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து கொண்டிருப்பதை அறிவோம். இந்த விவகாரத்தில் முடிந்தளவுக்கான அனைத்து உதவிகளையும் அரசு மேற்கொண்டுவருகிறது’ என இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்.