
ஏமனில் நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்படவிருந்த கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்மூலம், கொல்லப்பட்ட தலால் அப்டோ மஹ்தியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தீர்வை எட்டுவதற்கு அதிக நேரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை ஒத்திவைக்க வலுவான முயற்சிகள் நடந்து வருவதாக இன்று (ஜூலை 15) காலை முதலே செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
குறிப்பாக, இந்தியாவின் கிராண்ட் முப்தி என்ற பட்டத்தை வகிக்கும் மிக முக்கியமான சன்னி இஸ்லாமிய தலைவரான காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார், மரண தண்டனைக்கு ஈடாக இரத்தப் பணத்தை ஏற்றுக்கொள்ளும்படி மஹ்தியின் குடும்பத்தினரிடம் வலியுறுத்துமாறு ஏமனில் உள்ள இஸ்லாமிய மத தலைவர்களிடம் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஏமன் தலைநகர் சானாவிற்கு அருகிலுள்ள தாமரில் ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது. அபூபக்கர் முஸ்லியாரின் வேண்டுகோளின்பேரில், பிரபல அறிஞரும் சூஃபி தலைவருமான ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸ் தலைமையில் இந்த கூட்டம் நடந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மஹ்தி குடும்பத்தினரை சந்தித்து உமர் பின் ஹபீஸின் பிரதிநிதிகள் பேசியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்காக தாமருக்கு வருமாறு உமர் பின் ஹபீஸின் ஆலோசனையை மஹ்தியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், இந்த வழக்கில் தலையிடுவதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தபோதிலும், பிரியா தற்போது அடைக்கப்பட்டுள்ள ஏமனின் தலைநகரான சனாவில் உள்ள சிறைச்சாலையின் அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏமன் நாட்டவரான தலால் அப்டோ மஹ்தி என்பவரைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் 2018-ல் நிமிஷா பிரியாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஜனவரி 2024-ல் இருந்து ஏமனில் தங்கி தனது மகளை மீட்கும் முயற்சியில் நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி ஈடுபட்டு வருகிறார்.