
வாய்ப்பு கிடைத்திருந்தால், அண்மையில் நடைபெற்ற 12 நாள் போரின்போது ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை இஸ்ரேல் கொன்றிருக்கும் என்று அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் கான் தொலைக்காட்சிக்கு காட்ஸ் அளித்த பேட்டியில், `கமேனி எங்கள் பார்வைக்கு தட்டுப்பட்டிருந்தால், அவரை நாங்கள் அகற்றியிருப்போம் என்று நான் மதிப்பிடுகிறேன். நாங்கள் காமேனியை ஒழிக்க விரும்பினோம், ஆனால் அதை செயல்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை’ என்று கூறினார்.
மேலும், தனது உயிருக்கான அச்சுறுத்தலை உணர்ந்து காமேனி ஆழமாக அமைந்துள்ள நிலவறைக்கு சென்றுவிட்டதாகவும், இஸ்ரேலால் கொல்லப்பட்டவர்களுக்குப் பதிலாக புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட ஈரான் தளபதிகளுடன் அவர் தொடர்பை துண்டித்துக்கொண்டதாகவும் காட்ஸ் பேசியுள்ளார்.
கடந்த ஜூன் 13 அன்று ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி ஒரு ரகசிய இடத்தில் தஞ்சமடைந்துள்ளார், அதன்பிறகு இதுவரை அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்று அசோசியேட்டட் பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த வான்வழித் தாக்குதலில் பல மூத்த தளபதிகள் மற்றும் விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது காமேனி பெயரில் அறிக்கைகள் வெளிவந்தன.
இந்த மோதலின் தொடக்கத்தில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் காமேனி நேரடி இலக்காக இருக்கலாம் என்று சூசகமாக கருத்து தெரிவித்தனர். ஏனென்றால், இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் முழு போராக உருமாறும் பட்சத்தில், ஆட்சி மாற்றம் அதன் சாத்தியமான விளைவாகக் கருதப்பட்டது.
கடந்த ஜூன் 24 அன்று, அமெரிக்கா மேற்கொண்ட மத்தியஸ்தத்துடன் மோதல் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஜூன் 26 அன்று ஈரானிய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பதிவு செய்யப்பட்ட காணொளி மூலம், அந்நாட்டு மக்களிடம் உரையாற்றிய காமேனி, இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் வெற்றியை அறிவித்தார்.