இந்தியாவில் நடந்து வரும் மாற்றங்கள் உலக மக்களுக்குத் தெரிகிறது: பிரதமர் மோடி

நான் முதல் முறை பிரதமராகப் பொறுப்பேற்றபோது இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஸ்டார்ட் அப்கள் இருந்தன. இன்று லட்சக்கணக்கான ஸ்டார்ட் அப்கள் இருக்கின்றன
இந்தியாவில் நடந்து வரும் மாற்றங்கள் உலக மக்களுக்குத் தெரிகிறது: பிரதமர் மோடி
ANI
1 min read

ரஷ்யா வாழ் இந்தியர்களிடம், அந்நாட்டின் கஸன், யாக்கடரின்பர்க் நகரங்களில் புதிதாக இந்திய தூதரகங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தார் பிரதமர் மோடி.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று (ஜூலை 8) ரஷ்யாவுக்குச் சென்றார் பிரதமர் மோடி. மாஸ்கோ விமான நிலையத்தில் மோடிக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளித்தது ரஷ்ய அரசு. கடந்த 2019-ல் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் நடந்த பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற மோடி, 5 வருடங்கள் கழித்து ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார்.

மாஸ்கோ நகரில் மோடியை வரவேற்ற ரஷ்ய அதிபர் புதின் அவருடன் அதிகாரப்பூர்வமாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் பேசினார். அதற்குப் பிறகு மோடிக்கு விருந்தளித்தார் புதின். சந்திப்பு முடிந்ததும் கார்ல்டன் ஹோட்டலுக்கு மோடி சென்றபோது, அங்கே இருந்த இந்திய மக்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

`கடந்த 10 வருடங்களில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பார்த்து உலகம் ஆச்சரியமடைந்துள்ளது. இந்தியாவில் நடந்து வரும் மாற்றங்கள் உலக மக்களுக்குத் தெரிகிறது. நான் முதல் முறை பிரதமராகப் பொறுப்பேற்றபோது இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஸ்டார்ட் அப்கள் இருந்தன. இன்று லட்சக்கணக்கான ஸ்டார்ட் அப்கள் இருக்கின்றன’ என்று மாஸ்கோ வாழ் இந்திய மக்களிடம் இன்று காலை உரையாற்றினார் மோடி.

தன் உரையின் போது, ரஷ்யாவின் கஸன், யாக்கடரின்பர்க் நகரங்களில் புதிதாக இந்தியத் தூதரகங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தார் பிரதமர் மோடி. ஏற்கனவே ரஷ்யாவின் மாஸ்கோ, புனித பீட்டர்ஸ்பர்க், விளாடிவோஸ்டோக் நகரங்களில் இந்தியாவின் தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 10 வருடங்களில் மொத்தம் 16 முறை மோடியும், புதினும் சந்தித்துப் பேசியுள்ளனர். கடைசியாக 2022-ல் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கண்ட் நகரில் நடந்த `ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்’ மாநாட்டில் இந்த இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினார்கள்.

இன்று மாஸ்கோவில் இந்தியா-ரஷ்யா இடையிலான 22-வது வருடாந்திர உச்சி மாநாடு நடக்கிறது. இந்த உச்சி மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு சம்மந்தமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. மாநாடுக்குப் பிறகு ஆஸ்திரியா நாட்டுக்கு அரசு முறைப் பயணமாகச் செல்கிறார் மோடி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in