
இந்தியாவுடனான அனைத்துப் பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் பேசித் தீர்க்க விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் அப்பகுதியின் தலைநகரான முஸாஃபராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டார் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் தம்பியும், பாகிஸ்தான் பிரதமருமான ஷெபாஸ் ஷெரிஃப். இந்தக் கூட்டத்தில் அவர் கூறியதாவது,
`காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளையும் பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியாவுடன் பேசித் தீர்க்க விரும்புகிறோம். 2019 ஆகஸ்ட் 5-ல் இருந்து வெளியே வந்து, ஐநா சபைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்தியா பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டும்’ என்றார்.
மேலும், முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் 1999-ல் கையெழுத்திட்ட லாகூர் உடன்படிக்கையில் குறிப்பிட்டபடி, பேச்சுவார்த்தையால் மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையே சுமூக உறவுகள் உருவாகும் என்றும் பேசியுள்ளார் ஷெபாஸ் ஷெரிஃப்.
2019 ஆகஸ்ட் 5-ல் அன்றைய ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்த நிகழ்வைக் குறிப்பிட்டே ஷெபாஸ் ஷெரிஃப் பேசியுள்ளார். காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் பேசுவது இது முதல்முறை அல்ல.
ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் விவகாரத்தைப் பலமுறை எழுப்பியுள்ளது பாகிஸ்தான். ஆனால் இது இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கு இடையிலான தனிப்பட்ட விவகாரம் என்று பெருவாரியான பிற நாடுகள் கருதுவதால், ஐநா சபையில் போதிய ஆதரவு பாகிஸ்தானுக்குக் கிடைத்ததில்லை.
காஷ்மீர் குறித்த கேள்வியை பாகிஸ்தான் எழுப்பும்போது எல்லாம், ஜம்மு-காஷ்மீரும், லடாக்கும் இந்தியாவின் அங்கமாக எப்போதும் இருக்கும் என்பதே எங்கள் நிலைப்பாடு என இந்திய அரசு தொடர்ந்து பதிலளித்து வருகிறது.