
இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை மேலும் உயர்த்தவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா மீது 25% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது. தொடக்கத்தில், ஆகஸ்ட் 1 முதல் இது அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 7 முதல் நடைமுறைக்கு வரும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தான், சிஎன்பிசி-க்கு அளித்த நேர்காணலில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரியைக் கூட்டவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
"இந்தியா நல்ல வணிகக் கூட்டாளி அல்ல. காரணம், அவர்கள் எங்களுடன் நிறைய வணிகம் மேற்கொள்கிறார்கள். நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்வதில்லை. எனவே, 25% வரி விதிக்க முடிவு செய்தோம். ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரியைக் கணிசமாக உயர்த்தவுள்ளேன். காரணம், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குகிறது. உக்ரைன் மீதான போரை ஊக்குவிக்கிறது" என்றார் டிரம்ப்.
முன்னதாக, கடந்த ஜூலை 31 அன்று இந்தியா மீது வரி விதிக்கப்படுவது குறித்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதையும், நீண்டகாலமாக நிலவும் வர்த்தகத்திற்கான கட்டுப்பாடுகளையும், இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணங்களாக மேற்கோள் காட்டப்பட்டன.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது மற்றும் இதுசார்ந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் இந்தியா தரப்பில் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தியா "நியாயமற்ற வகையில்" குறிவைக்கப்படுவதாக அமெரிக்காவைக் கண்டித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.
Donald Trump | USA | US | US President | Tax | Tarrif | India | India US | Tariff on India | US Tariff | Russian oil