ஆஸ்திரேலியா சென்றடைந்தார் ஜூலியன் அசாஞ்சே!

அசாஞ்சேவை நாடு கடத்த வேண்டும் என பிரிட்டனிடம் வைத்த கோரிக்கையை அமெரிக்க அரசு திரும்பப் பெற்றது. அவர் மீது நிலுவையில் இருந்த மற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கைவிட்டது.
ஆஸ்திரேலியா சென்றடைந்தார் ஜூலியன் அசாஞ்சே!

விக்கி லீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினார்.

அமெரிக்காவின் பல்வேறு முக்கிய ஆவணங்களை விக்கி லீக்ஸ் மூலம் கசியவிட்ட குற்றத்துக்காக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஹேக்கிங் மூலம் பல்வேறு அரசு ஆவணங்களை இவர் விக்கி லீக்ஸ் மூலம் கசியவிட்டார். ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற போர்களில் அமெரிக்கா போர்க் குற்றங்களில் ஈடுபட்டது, விதிமீறலில் ஈடுபட்டது உள்ளிட்ட தகவல்கள் இவர் மூலமாக வெளிச்சத்துக்கு வந்தன. குறிப்பாக, பாக்தாத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய ஹெலிகாப்டர் தாக்குதலின் காணொளிகள் கசியவிடப்பட்டன. இந்தத் தாக்குதலில் ராய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் உயிரிழந்தார்கள்.

அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த அசாஞ்சே, 2019 வரை 7 ஆண்டுகள் ஈக்குவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். இதன்பிறகு, அசாஞ்சே பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், அமெரிக்க நீதித் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றத்தை ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அசாஞ்சே விடுதலையானார்.

அமெரிக்கா செல்ல அசாஞ்சே மறுப்பு தெரிவித்ததையடுத்து, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள சைபான் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. லண்டனிலிருந்து தனி விமானம் மூலம் சைபான் சென்றடைந்து, நீதிமன்றம் முன்பு ஆஜரானார். அங்கு அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களைக் கசியவிட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். இந்தக் குற்றத்துக்காக அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், கடந்த 5 ஆண்டுகளாக லண்டன் சிறையிலிருந்ததைக் கணக்கில்கொண்டு, அவை தண்டனைக் காலத்திலிருந்து கழிக்கப்பட்டன. இதன் அடிப்படையில், சுதந்திர மனிதராக அவர் விடுதலையானார்.

14 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, லண்டனிலிருந்து சைபானுக்கு வந்த அதே தனி விமானம் மூலம் ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பெரா சென்றடைந்தார். உள்நாட்டு நேரப்படி இரவு 7.30 மணியளவில் அவர் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளார். இவருடன் பிரிட்டனுக்காக ஆஸ்திரேலிய தூதர் ஸ்டீஃபன் ஸ்மித், அமெரிக்காவுக்கான ஆஸ்திரேலிய தூதர் கெவின் ருட் ஆகியோரும் பயணித்தார்கள்.

விசாரணை நிறைவடைந்தவுடன், அசாஞ்சேவை நாடு கடத்த வேண்டும் என பிரிட்டனிடம் வைத்த கோரிக்கையை அமெரிக்க அரசு திரும்பப் பெற்றது. அவர் மீது நிலுவையில் இருந்த மற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கைவிட்டது. மேலும், அனுமதியின்றி அமெரிக்கா திரும்ப அசாஞ்சேவுக்கு அந்த நாட்டு அரசு தடைவிதித்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in