
இந்தியாவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க எதற்காக நாம் 21 மில்லியன் டாலர்கள் நிதியதவியாக வழங்கவேண்டும் என்று காணொளி வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு, `அரசு செயல்திறன் துறை’ என்ற பெயரில் ஒரு புதிய துறையை உருவாக்கிய டிரம்ப், அதன் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்கை நியமித்தார். அமெரிக்க அரசு மேற்கொண்டு வரும் தேவையற்ற செலவினங்களை குறைத்து, அரசு நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்துவது இந்த அமைப்பின் நோக்கமாகும்.
இந்நிலையில், அமெரிக்க அரசு சார்பில் வெளிநாடுகளுக்கு வழங்கி வரும் நிதியுதவியில் சுமார் 723 மில்லியன் டாலர்களைக் குறைக்கும் வகையிலான பரிந்துரையை அண்மையில் வழங்கியது செயல்திறன் துறை. இதில், வாக்கு சதவீத்தை அதிகரிக்க இந்தியாவிற்கு வழங்கப்பட்டு வரும் 21 மில்லியன் டாலர்கள் (ரூ. 182 கோடி) நிதியுதவியும் அடக்கம்.
அரசு செயல்திறன் துறையின் இந்த பரிந்துரையை வரவேற்றுள்ள அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகை வெளியிட்ட காணொளியில் இந்தியாவிற்கான நிதியுதவியை குறித்து கூறியதாவது,
`இந்தியாவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க நாம் ஏன் 21 மில்லியன் டாலர்கள் வழங்க வேண்டும்? அவர்கள் வசம் நிறைய பணம் உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரையில், உலகில் அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. அங்கே வரிகள் மிகவும் அதிகம் என்பதால், நமக்கான வேலை அங்கே குறைவு.
இந்தியா மீது எனக்கு மரியாதை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர்கள் இந்தியாவிற்கு வழங்கப்படுகிறது. இங்கு என்ன வாக்கு சதவீதம் இருக்கிறது?’ என்று பேசியுள்ளார்.