
பாகிஸ்தானில் உள்ள மாகாணங்களில் பரப்பளவில் மிகப் பெரியது பலூசிஸ்தான். அந்த பலூசிஸ்தான் தான் தற்போது பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற்று தனிக் குடியரசாகிவிட்டதாக பலூச் தலைவர்கள் அறிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதாவது இத்தனை நாளாக பாகிஸ்தானிடமிருந்து விடுதலை கோரி வந்த பலூச் மக்கள், தற்போது தங்களைத் தனி நாடாகவே அறிவித்துள்ளார்கள். பலூசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் 80 சதவீதம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக பலூச் அமெரிக்கன் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ரசாக் பேட்டியளித்துள்ளார். சமூக ஊடகங்களில் பலூசிஸ்தானின் தேசியக் கொடி மற்றும் சுதந்திர பலூச் வரைபடம் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. பலூசிஸ்தானை அங்கீகரிக்கவும் தில்லியில் பலூசிஸ்தானின் தூதரகத்தை அமைக்கவும் இந்தியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுளது.
ஆம்... நாளுக்கு நாள் பாகிஸ்தானின் கையை விட்டு பலூசிஸ்தான் மெல்ல மெல்ல விலகுவது போலத்தான் தெரிகிறது.
பாகிஸ்தானிலிருந்து பலூசிஸ்தான் முழு விடுதலை பெற்றுவிட்டால், தெற்காசிய வரைபடம் மாற்றியமைக்கப்படும். பாகிஸ்தானுக்கு சர்வதேச அரங்கில் உள்ள மதிப்பும் தவிடுபொடியாகும் அபாயமும் உள்ளது. பாகிஸ்தான் என்கிற நாடே ஆட்டங்கண்டுவிடும். அப்படியொரு அவசரநிலையில் உள்ளது பாகிஸ்தான்.
பலூசிஸ்தான் பாகிஸ்தானுக்கு ஏன் அப்படியொரு முக்கியமான பகுதி? அதை இழந்தால் பாகிஸ்தான் ஏன் தன் இதயத்தை இழந்தது போலாகிவிடும்?
1947-ல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது, பலூசிஸ்தான் மாகாணம் பாகிஸ்தானுடன் இணையவில்லை. அங்கிருந்து தொடங்கியது சச்சரவு. முதலில் தனி மாகாணமாக இருந்து 1948-ல் பல்வேறு அழுத்தங்களின் காரணமாகவே பாகிஸ்தானுடன் பலூசிஸ்தான் இணைந்தது.
பாகிஸ்தானுடன் இணைந்துவிட்டாலும் அப்பகுதி மக்களில் ஒரு சாராருக்குக் கோபமும் ஆதங்கமும் மட்டும் குறையவே இல்லை. 1950களில் இருந்து தொடர்ந்து கிளர்ச்சிகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. அடக்கமுடியாத காட்டுத்தீயாகப் பல்கிப் பெருகிய கோபம் இன்று தனி நாடாகத் தங்களை அறிவிக்கும் வரைக்கும் சென்றுள்ளது.
பாகிஸ்தானின் வரைபடத்தைப் பார்த்தாலே தெரியும். பலூசிஸ்தான், பாகிஸ்தானின் பரப்பளவில் 44% நிலப்பரப்புடன் எவ்வளவு பெரியதாக இருக்கிறது பாருங்கள். பாதி நாட்டைக் காவு கொடுக்க எந்த ஆட்சி நிர்வாகம் சம்மதிக்கும்? பாகிஸ்தானில் உள்ள இனக்குழுக்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்களும் பலூச் மக்கள் தான். மேலும் பலூசிஸ்தானில் ஏராளமான இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இப்பகுதியில் இயற்கை எரிவாயு, தாதுக்கள், தாமிரம் மற்றும் தங்கம் எல்லாம் தாரளமாகக் கிடைப்பதால் மிகவும் வளம் மிக்க ஒரு நிலப்பரப்பாகவே பலூசிஸ்தான் உள்ளது. இங்குள்ள பயன்படுத்தபடாத கனிம வளங்களின் மதிப்பு 1 டிரில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் 86 லட்சம் கோடி ரூபாய்.
இத்தனை இயற்கை வளங்கள் இருந்தால், அம்மாகாணம் மிகவும் செல்வசெழிப்புமிக்க மாகாணமாகத்தானே இருந்திருக்க வேண்டும்? அதுதான் இல்லை. பாகிஸ்தானிலேயே வளர்ச்சியடையாத மாகாணம் என்றால் அது பலூசிஸ்தான் தான். அங்குள்ள மக்கள் தலைமுறை தலைமுறையாக ஏழைகளாகவே உள்ளார்கள். பொருளாதார வளர்ச்சியில் ஆரம்பித்து எல்லா அம்சங்களிலும் முன்னேற்றம் அடையாத பலூசிஸ்தான் தான் ராணுவத்தின் அதிகக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மாகாணமாக உள்ளது. கிளர்ச்சியாளர்களால் பலூசிஸ்தான் ஒருபோதும் கையை விட்டுப் போய்விடக் கூடாது என்று இத்தனை ஆண்டுகளாக உஷாராகவே இருந்து வந்தது பாகிஸ்தான். தன்னுடைய ஒரு கண்ணை காஷ்மீரிலும் இன்னொரு கண்ணை பலூசிஸ்தானிலுமே வைத்து வந்தது.
மனித வளம், இயற்கை வளம் தாண்டி பலூசிஸ்தானால் பாகிஸ்தானுக்கு இன்னொரு சாதக அம்சமும் உண்டு. அதன் கடற்கரையோர எல்லைப் பகுதி.
சீனா, பாகிஸ்தானின் பொருளாதார வழித்தடம் பலூசிஸ்தானை நம்பித்தான் உள்ளது. இதன் மையம், அரபிக் கடலை ஒட்டியுள்ள க்வாடார் துறைமுகம். இது சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பலூசிஸ்தானையும் க்வாடார் துறைமுகத்தையும் பாகிஸ்தான் இழந்தால் மிகப் பெரிய பொருளாதார அடி ஏற்படும். உற்ற நண்பனான சீனாவின் நட்பை இழக்க நேரிடும்.
பலூசிஸ்தான் தனியாகச் சென்றால் இன்னொரு பெரிய சிக்கல் பாகிஸ்தானுக்கு ஏற்படும். பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதற்காக சீனாவிடம் பெற்ற கடனை அடைக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கு ஏற்பட்டு விடும். பலூசிஸ்தானும் இல்லாமல் அதன் இயற்கை வளங்களும் இல்லாமல் இதனால் சீனாவின் ஆதரவும் இல்லாமல் பாகிஸ்தானால் எப்படி பல ஆயிரம் கோடி கடன்களை அடைக்க முடியும்?
மலேசியா, இந்தோனேசியா இடையில் உள்ள மலாக்கா ஜலசந்தி வழியே கப்பல் போக்குவரத்து மேற்கொள்வது தான் சீனாவுக்குச் சுலபமானது. ஆனால் அப்பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகம். போர்ச்சூழல் அல்லது பிரச்னை காலங்களில் அமெரிக்கா தனது கூட்டாளி நாடுகளுடன் இணைந்து அப்பகுதியில் சீனக் கப்பல்கள் நுழைய முடியாத வகையில் சிக்கலை உண்டாக்கலாம். இதைத் தவிர்க்க சீனாவுக்கு உதவுவது பலூசிஸ்தானின் க்வாடார் துறைமுகம் தான். இதில் அமெரிக்காவின் அச்சுறுத்தல் எதுவும் சீனாவுக்குக் கிடையாது.
தங்களுடைய பிராந்தியத்தில் சீனாவின் முதலீட்டை பலூசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் குழு விரும்பவில்லை. 2018-ல் கராச்சியில் சீனத் தூதரகத்தைக் குறிவைத்தது, 2019-ல் சீனர்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் தாக்குதல் நடத்தியது என தங்களுடைய சீன எதிர்ப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார்கள்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடன் தன் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது பலூசிஸ்தான். ஈரானிலும் சிஸ்டான் பலூசிஸ்தான் என்கிற பெயரில் எல்லையோர மாகாணம் உள்ளது. அங்கும் பலூச் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குழு உள்ளது. தற்போது பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தான் விடுதலை பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டால், இது ஈரானிலும் எதிரொலிக்கும். இதுபோன்ற ஒரு பிரிவினைக்கு ஈரான் ஒப்புக்கொள்ளாது.
பலூசிஸ்தானை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக் கூடாது என்று தொடர்ந்து ராணுவக் கட்டுபாடுகள் மற்றும் அடக்குமுறைகளைக் கொண்டு கிளர்ச்சியாளர்களை ஆதிக்கம் செலுத்த விடாமல் செய்திருந்தது பாகிஸ்தான் அரசு. இப்போது பலூசிஸ்தான் போராட்டம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. பலூசிஸ்தானின் வரலாறு, கிளர்ச்சியாளர்கள் பக்கமுள்ள நியாயங்கள் விவாதிக்கப்படுகின்றன. இது கிளர்ச்சியாளர்களுக்கு மேலும் உற்சாகத்தைத் தந்துள்ளது.
பலூசிஸ்தான் இல்லையென்றால் பாகிஸ்தானின் நிலையை எண்ணிப் பாருங்கள். அதன் வரைபடத்தில் மேலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. தற்போதைய நிலைமை பாகிஸ்தானின் எதிர்காலத்தை மோசமாகவே வெளிப்படுத்துகிறது.