காஸாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஒரு சில நாட்களில் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கான உணவு மற்றும் மருந்துகள் ஆகியவற்றை வழங்குவதற்கான மனிதாபிமான உதவிக்காக நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
காஸாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
1 min read

அடுத்த சில நாட்களில் மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்காவிட்டால் காஸாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் டெட்ரோஸ்.

சர்வதேச அளவில் உலக நாடுகளில் நிலவும் உணவுப் பாதுகாப்பின்மை குறித்த ஆய்வறிக்கைகளை, `ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு’ (Integrated Food Security Phase Classification) என்ற தன்னார்வு அமைப்பின் கீழ் செயல்படும், `பஞ்சத்துக்கான ஆய்வுக் குழு’ குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடும்.

காஸாவின் வடக்குப் பகுதிக்குள் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்பு வலுவாக உள்ளது என நேற்று (நவ.8) இந்த பஞ்சத்துக்கான ஆய்வுக்குழு அறிக்கை ஒன்று வெளியிட்டது. காஸாவில் நிலவும் உணவின்மை நிலவரம் குறித்து வெளியான பல்வேறு அமைப்புகளின் அறிக்கைகள் இதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு காஸா பகுதிக்கு அனுப்பப்படும் உணவுகள், மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளின் எண்ணிக்கை கடந்த அக்டோபர் மாதத்தில் வெகுவாக குறைந்துள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சமையல் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை காஸாவில் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள், பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவை இந்தப் பகுதியில் பலமடங்கு அதிகரித்துள்ளன, பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்பு நெருங்கியுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பஞ்சத்துக்கான ஆய்வுக் குழுவின் இந்த அறிக்கையை மேற்கோள்காட்டி தன் எக்ஸ் சமூகவலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் பொதுச்செயலாளர் டெட்ரோஸ், `ஒரு சில நாட்களில் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கான உணவு மற்றும் மருந்துகள் ஆகியவற்றை வழங்குவதற்கான மனிதாபிமான உதவிக்காக நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in