பிரதமர் மோடி சந்தித்த அமெரிக்க உளவுத்துறை இயக்குநர்: யார் இந்த துளசி கப்பார்ட்?

பிரதமர் மோடி சந்தித்த அமெரிக்க உளவுத்துறை இயக்குநர்: யார் இந்த துளசி கப்பார்ட்?

ஜனநாயகக் கட்சி சார்பில் ஹவாய் மாகாணத்தில் இருந்து 4 முறை பிரதிநிதிகள் சபை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Published on

அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு, அந்நிகழ்விற்கு இணை தலைமை தாங்கிய பிரதமர் மோடி, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று (பிப்.13) அமெரிக்காவுக்குச் சென்றார்.

அங்கு அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி. இந்த சந்திப்பு தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது,

`அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டை வாஷிங்டன் டி.சி.யில் சந்தித்தேன். அவரது புதிய பொறுப்பிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.  இந்திய-அமெரிக்க நட்புறவின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து அவருடன் ஆலோசித்தேன். இந்தியாவுடனான அமெரிக்காவின் நட்புறவில் எப்போதுமே உறுதியாக இருப்பவர் துளசி கப்பார்ட்’ என்றார்.

43 வயதான துளசி கப்பார்ட் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய அனுபவமுடையவர். ராணுவப் பணிக்குப் பிறகு ஜனநாயகக் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய கப்பார்ட், ஹவாய் மாகாணத்தில் இருந்து 4 முறை பிரதிநிதிகள் சபையின் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி.யாக அறியப்படும் கப்பார்ட் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்ல. மாறாக அவர் இந்து மதத்தைப் பின்பற்றுகிறார். கடந்த 2022-ல் ஜனநாயக கட்சியில் இருந்து விலகிய கப்பார்ட், 2024-ல் குடியரசு கட்சியில் இணைந்தார்.

கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் சேர்ந்த டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்காவின் உளவுத்துறை இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in