
அமெரிக்க உள்நாட்டு புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ.யின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல்.
உலகின் முன்னணி புலனாய்வு நிறுவனங்களில் ஒன்றான, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. அமைப்பின் புதிய இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் பட்டேலை நியமித்துள்ளார் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அவரது இந்த நியமனத்திற்கு அமெரிக்க மேலவையான செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, எஃப்.பி.ஐ. இயக்குநர் பதவியை வகிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் என்கிற பெருமையைப் பெற்றார் காஷ் பட்டேல்.
காஷ்யப் பரமோத் வினோத் படேல் என்கிற காஷ் படேல், 1980-ல் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பிறந்தார். இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இவரது பெற்றோர், 1970-களில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்கள். ரிச்மாண்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, நியூயார்க்கில் சட்டப்படிப்பை முடித்தார் படேல்.
குடியரசுக் கட்சியில் இணைந்து தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய படேல், கடந்த முறை டிரம்ப் அதிபராக இருந்தபோது தேசிய பாதுகாப்பு கவுன்சிலிலும், தேசிய உளவு அமைப்பிலும் பணியாற்றினார். இந்நிலையில் தற்போது எஃப்.பி.ஐ. இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில் காஷ் படேல் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`எஃப்.பி.ஐ. அமைப்பின் ஒன்பதாவது இயக்குநராக நியமிக்கப்பட்டதில் பெருமையடைகிறேன். என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த, அதிபர் டிரம்ப் மற்றும் அட்டர்னி ஜெனரல் போண்டிக்கு நன்றி. எஃப்.பி.ஐ. மீதான நம்பிக்கையை மீள் உருவாக்கம் செய்வதே எனது நோக்கம்.
அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்பவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். உலகின் எந்த மூலையில் இருந்தாலும், உங்களை வேட்டையாடுவோம். நோக்கமே முக்கியம். எப்போதும் அமெரிக்கா. வேலையைத் தொடங்குவோம்’ என்றார்.