
வரும் ஜன.20-ல் புதிய அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் நிகழ்வில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸைத் தோற்கடித்தார் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப். இதைத் தொடர்ந்து வரும் ஜன.20-ல் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்பும், 50-வது துணை அதிபராக ஜெ.டி. வான்ஸும் பதவியேற்கின்றனர்.
இந்தப் பதவியேற்பு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. அதேநேரம், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதில் பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் பங்கேற்ற கையோடு, டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க அரசு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் ஜெய்சங்கர்.
அத்துடன், வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்கும் பிற சர்வதேச தலைவர்களிடமும் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலொனி, ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டகேஷி இவாயா, முன்னாள் பிரேசில் அதிபர் போல்சனாரோ ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜின்பிங்கிற்குப் பதில் மூத்த அமைச்சர் தலைமையிலான சீன அரசின் உயர்மட்டக் குழு இதில் பங்கேற்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜன.20-ல் (இந்திய நேரப்படி) இரவு 10.30 மணிக்கு இந்தப் பதவியேற்பு நிகழ்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.