

வெனிசுலா அதிபர் மதுரோ கைது செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, திடீரென வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்க விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் குண்டு வீசி தாக்குதலை தொடங்கின. ராணுவ தளங்கள், பாதுகாப்புத்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
நாடு கடத்தப்பட்ட அதிபர் மதுரோ
இதற்கிடையில், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவைச் சிறைபிடித்து நாடு கடத்திவிட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இது குறித்து தனது ட்ரூத் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு வெளியிட்ட அதிபர் டிரம்ப், “வெனிசுலாவிற்கும் அதன் தலைவர் நிக்கோலஸ் மதுரோவிற்கும் எதிராக அமெரிக்கா ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது, அவர் தனது மனைவியுடன் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்” என்று கூறினார்.மேலும் அவர்களது இருப்பிடம் குறித்த தகவல் தெரியவில்லை என்று வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்திருந்தார்.
இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்
வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிகோலஸ் மதுரோ கைதான நிலையில், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டது. அந்நாட்டின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை இடைகால அதிபராக நியமித்தது. இது அந்நாட்டின் அரசு நிர்வாகத்தை தொடர்ந்து கட்டுக்குள் கொண்டு வருவதை உறுதிசெய்ய இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வெனிசுலாவின் சட்டப்படி, அதிபர் நிரந்தரமாகப் பணி செய்ய முடியாத சூழலில் 30 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், மதுரோ விவகாரத்தில் நீதிமன்றம் அவரை நிரந்தரமாகப் பதவி இழந்தவராக அறிவிக்காததால், டெல்சியை இடைக்கால அதிபராகவே நியமித்துள்ளது.
யார் இந்த டெல்சி ரோட்ரிக்ஸ்?
வெனிசுலாவின் காராகஸில் 1969 மே 18-ல் பிறந்தவர் டெல்சி ரோட்ரிக்ஸ். இவரது தந்தை லிகா சோஷியலிஸ்டா கட்சியைத் தொடங்கிய இடதுசாரி போராளி ஜார்ஜ் ஆன்டோனியோ ரோட்ரிக்ஸ். வெனிசுலா மத்திய பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணிகளைத் தொடங்கிய இவர், பின்னர் அரசியலில் ஈடுபட்டார்.
வெனிசுலாவில் கடந்த 2018 ஜூன் முதல் துணை அதிபராக இருந்தவர் டெல்சி ரோட்ரிக்ஸ். அவர் நிதி மற்றும் எண்ணெய் அமைச்சராகவும் உள்ளார். துணை அதிபர் பொறுப்புகளைக் கடந்து இரண்டு முக்கிய துறைகளின் அமைச்சராகவும் இருக்கும் காரணத்தால் வெனிசுலா அரசில் மிக சக்திவாய்ந்த நபராக உள்ளார்.
வெனிசுலா அரசியலில் நிகோலஸ் மதுரோவின் நம்பிக்கைக்கு உரிய தலைவராக வளர்ந்த டெல்சி ரோட்ரிக்ஸ், மதுரோவால் ‘புலி’ என்று வர்ணிக்கப்பட்டவர். அவரது விசுவாசம் மற்றும் கொள்கை பாதுகாப்புக்காக பலமுறை பாராட்டப்பட்டு உள்ளார். வெனிசுலாவின் பொருளாதார வளர்ச்சியிலும் மரபுசார் கொள்கைகள் மூலம் பங்காற்றியுள்ளார்.
Venezuelan President Maduro under arrested, Vice President Delcy Rodriguez has taken over as interim president, as ordered by the Supreme Court.