
கனடா பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான புதிய அமைச்சரவையில், வெளியுறவு அமைச்சராக தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் பதவியேற்றுள்ளார்.
பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி, கடந்த மாதம் நடைபெற்ற கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. இந்நிலையில், கார்னி தலைமையிலான அந்நாட்டின் புதிய அமைச்சரவை நேற்று (மே 13) பதவியேற்றுக்கொண்டது.
கடந்த முறை புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில் அமைச்சராக இருந்த அனிதா ஆனந்த, இந்த முறை வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். பதவிப் பிரமாணத்தை ஏற்றபோது அவரது கையில் பகவத் கீதை இருந்தது.
அமைச்சராகப் பதவியேற்ற பிறகு, தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்ட அனிதா ஆனந்த், `கனடாவின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன். பாதுகாப்பான, நியாயமான உலகத்தை உருவாக்கி கனடா மக்களுக்கு வழங்க, பிரதமர் மார்க் கார்னி மற்றும் எங்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன்’ என்றார்.
20 மே, 1967 அன்று கனடாவின் நோவா ஸ்கொட்டியா மாகாணத்தின் கென்ட்வில்லியில், இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர்களான சரோஜ் டி ராம் மற்றும் எஸ்.வி. ஆனந்த் ஆகியோருக்கு மகளாக அனிதா ஆனந்த் பிறந்தார். பஞ்சாபை சேர்ந்த அவரது தாயாரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தந்தையும் 1960-களின் முற்பகுதியில் கனடாவுக்குக் குடிபெயர்ந்தனர்.
2019 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அனிதா ஆனந்த், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் பாதுகாப்பு, உள்நாட்டு வர்த்தகம், போக்குவரத்து, புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில் எனப் பல்வேறு துறைகளின் அமைச்சராக செயல்பட்டுள்ளார்.
காலிஸ்தான் விவகாரத்தை முன்வைத்து இந்தியா, கனடா இடையிலான அரசுரீதியிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கனடாவின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.