
குரங்கு அம்மை என்று அழைக்கப்படும் மங்கி பாக்ஸ் நோய் பரவல் குறித்த உலகளாவிய சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது உலக சுகாதார மையம்.
உலக சுகாதார மையத்தின் அவசர குழுவின் ஆலோசனையை ஏற்று, குரங்கு அம்மை நோய் பரவல் குறித்த உலகளாவிய சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக உலக சுகாதார மையத்தின் பொதுச் செயலாளர் டெட்ரோஸ், எக்ஸ் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக நேற்று (ஆகஸ்ட் 14) அறிவித்துள்ளார்.
இதை அடுத்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரங்கு அம்மை நோயின் தாக்கம் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ஆப்ரிக்காவைச் சேர்ந்த காங்கோ டெமாக்ரடிக் ரிபப்ளிக் நாட்டில் இருந்து வருவதாகவும், படிப்படியாக அதன் தாக்கம் உயர்ந்து வருவதாகவும் தகவல் அளித்துள்ளது.
மேலும் தற்போது 13 ஆப்ரிக்க நாடுகளில் குரங்கு அம்மை நோய் மிக வேகமாகப் பரவி வருவதாகவும், இதனால் இதுவரை ஆப்ரிக்காவில் 14,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 524 நபர்கள் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
குரங்கு அம்மை நோயை பரப்பும் வைரஸ் குரங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மையை உடையது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் தாக்கத்தின் அறிகுறியாக தலை முதல் உள்ளங்கால் வரை கொப்பளங்கள் தோன்றும், தலைவலி தசைபிடிப்பு, உடல் சோர்வு, தொண்டைப்புண், கடுமையான இருமல் ஆகியவையும் ஏற்படும்.
இந்த நோய் பாதிப்பு மனிதர்களிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் தன்மையுடையது. குரங்கு அம்மை வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதரின் வியர்வை, கண்ணீர் போன்ற உடலில் இருந்து வெளியாகும் திரவங்கள், தோலில் உள்ள கொப்பளங்கள், எச்சில்-இருமல் துளிகள் ஆகியவற்றிலிருந்து பிற மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவும்.