நான் யார்? என்ன நடந்தது?: தென் கொரிய விமான விபத்தில் உயிர் தப்பியவர் கேள்வி

உயிருடன் மீட்கப்பட்ட இருவரும் விமானப் பணியாளர்கள். விபத்தின்போது இருவரும் விமானத்தின் பின்பகுதியில் இருந்துள்ளார்கள்.
நான் யார்? என்ன நடந்தது?: தென் கொரிய விமான விபத்தில் உயிர் தப்பியவர் கேள்வி
1 min read

தென் கொரியா விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்த நிலையில், இருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள்.

தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் தென் கொரியாவிலுள்ள முவானுக்கு ஜேஜு ஏர் விமானம் வந்துள்ளது. முவான் விமான நிலையத்தில் டிசம்பர் 29 அன்று விமானம் தரையிறங்கும்போது, தரையிறங்குவதற்கான கியர் வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது. இதனால், விமான நிலையத்திலுள்ள ஓடுதளத்தில் தரையிறங்கிய விமானம், கட்டுப்பாட்டை இழந்து நிற்காமல் தடுப்புச் சுவரில் மோதி வெடித்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 181 பேரில் 179 பேர் உயிரிழந்தார்கள். 32 வயது லீ மற்றும் 25 வயது குவோன் ஆகிய இருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்கள். இருவரும் விமானப் பணியாளர்கள். விபத்தின்போது இருவரும் விமானத்தின் பின்பகுதியில் இருந்துள்ளார்கள்.

கொரியன் டைம்ஸில் வெளியான செய்தியின்படி, மோக்போ கொரியன் மருத்துவமனையில் லீ அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் "என்ன நடந்தது? நான் ஏன் இங்கு இருக்கிறேன்?" என மருத்துவர்களிடம் பலமுறை கேட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவருக்கு இடது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தலையில் காயங்கள் இருந்தாலும், சுயநினைவோடு இருக்கிறார்.

குவோனுக்கு விமான விபத்து குறித்து நினைவு இருப்பதாகத் தெரியவில்லை. கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வயிற்றுக்கு அடிபகுதியில் வலி இருக்கிறது. இவருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். இவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லாதபோதிலும், விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியும் காயங்களும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி இருவரையும் மனதளவில் பாதித்துள்ளது தெரியவருகிறது.

குடும்பத்தினரின் விருப்பப்படி, லீ மட்டும் சியோலில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in