
ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள ஹீலியம் கசிவு போன்ற பிரச்சனைகளைச் சரி செய்ய நாசா நிறுவனம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகஸ்ட் மாதத்திலாவது பூமிக்குத் திரும்புவார்களா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 5-ல் அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவின் சார்பில், புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் தங்கியிருந்து தங்களது ஆய்வை முடித்துவிட்டு ஜூன் 13-ல் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா தகவல் தெரிவித்தது.
ஆனால் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்ற பிறகு, அவர் சென்ற ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் ஹீலியம் கசிவு ஏற்பட்டதும், ராக்கெட் மோட்டரான த்ரஸ்டர் செயலிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. 50 நாட்களுக்கும் மேலாக இவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ளனர்.
த்ரஸ்டர் செயலிழப்பு தொடர்பாக நாசாவின் பொறியாளர்கள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் த்ரஸ்டர்களுக்குள் வெப்பம் அதிகரிப்பது அவை செயலிழப்பதற்குக் காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்குத் திரும்பும் போது அதைத் தானியங்கி முறையில் அல்லாமல் அவர்களே இயக்குவது தொடர்பாகவும் விஞ்ஞானிகள் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ட்ரேகன் கேப்சூல் விண்கலத்தை உபயோகித்து அவர்கள் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவது தொடர்பாகவும் நாசா ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.