டிரம்ப் நன்றியில்லாதவர்: எலான் மஸ்க் குற்றச்சாட்டும், பரஸ்பர விமர்சனங்களும்!

எலான் மீது மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்; அவருக்கு நிறைய உதவிகளைச் செய்தேன்.
டிரம்ப் நன்றியில்லாதவர்: எலான் மஸ்க் குற்றச்சாட்டும், பரஸ்பர விமர்சனங்களும்!
2 min read

முன்பு நெருக்கமாக இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே தற்போது மோதல் வெடித்துள்ள நிலையில், இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

அமெரிக்க அரசின் புதிய வரி மசோதா தொடர்பாக, அண்மையில் தன் எக்ஸ் கணக்கில் தொழிலதிபர் எலான் மஸ்க் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்தார்.

இதைத் தொடர்ந்து, ஓவல் அலுவலகத்தில் வைத்து ஜெர்மனி அதிபருடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது டிரம்ப் கூறியதாவது,

`எலானுக்கும் எனக்கு இடையிலான உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் இனி அப்படி இருக்குமா என்பது தெரியவில்லை. இந்த புதிய மசோதாவின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் அவருக்கு நன்றாகத் தெரியும். பிறரைவிட இது குறித்து அவருக்கு நன்றாகவே தெரியும். (அமெரிக்க அரசுப் பொறுப்பில் இருந்து) வெளியேறிய பிறகு அவருக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.

என்னைப் பற்றிய பல அழகான விஷயங்களை அவர் கூறியுள்ளார், தனிப்பட்ட முறையிலும் அவர் தவறாக எதுவும் கூறவில்லை, ஆனால் அடுத்தது அதுவாகவே இருக்கும் என்று நினைக்கிறேன், எலான் மீது நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். எலானுக்கு நிறைய உதவிகளை செய்தேன்’ என்றார்.

இதைத் தொடர்ந்து டிரம்ப் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்ட எலான் மஸ்க், `பொய். என்னிடம் ஒரு முறைகூட மசோதா கட்டப்படவில்லை, மிக வேகமாக மசோதா நிறைவேற்றப்பட்டது, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒருவராலும்கூட அதை படிக்க முடியவில்லை’ என்றார்.

இதன் தொடர்ச்சியாக, தான் இல்லாவிட்டால் அதிபர் தேர்தலில் டிரம்பால் வெற்றிபெற்றிருக்க முடியாது என்றும், அவர் நன்றிகெட்டவர் என்றும் மஸ்க் கடுமையாக விமர்சித்தார்.

அதன்பிறகு மஸ்கிற்கு அளிக்கப்பட்டுள்ள அரசாங்க மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் வெளிப்படையாக மிரட்டினார். இதற்கு பதிலடியாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் திட்டம் கைவிடப்படும் என்று எச்சரித்தார் மஸ்க்.

மஸ்க் அறிவித்ததுபோல நடைபெற்றால், அமெரிக்காவின் விண்வெளித் திட்டங்கள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்படும். ஆனால் சில மணி நேரத்திற்குள்ளாகவே தனது அறிவிப்பை அவர் திரும்பப்பெற்றுக்கொண்டார்.

மேலும், அதிபர் பதவியில் இருந்து டிரம்பை பதவி நீக்கம் செய்துவிட்டு, அவருக்குப் பதிலாக துணை அதிபர் வான்ஸை புதிய அதிபராக நியமிக்கவேண்டும் என்று மஸ்க் கருத்து தெரிவித்தார். அத்துடன் டிரம்ப் மேற்கொண்ட பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையால், நடப்பாண்டின் 2-வது பாதியில் உலகளாவிய பொருளாதார மந்த நிலை உருவாகும் என்றும் மஸ்க் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையே அதிபர் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் மஸ்க் கிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலால், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு நேற்று (ஜூன் 6) பங்குச்சந்தை வர்த்தகம் நிறைவடையும்போது சுமார் 14.2% குறைந்தது. மேலும் அதன் மூலம் 152 பில்லியன் டாலர் அவருக்கு இழப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அரசால் தயாரிக்கப்பட்ட பட்ஜெட், எலான் மஸ்க் தலைமையிலான அரசு செயல்திறன் துறையால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு மாறாக இருந்ததே இந்த மோதலுக்கான தொடக்கப்புள்ளி என்று காரணம் தெரிவிக்கப்படுகிறது. பட்ஜெட்டில் மக்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டதோடு, ராணுவத்திற்கான செலவினங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in