
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடைமுறை அறிவிப்பால் உலகளாவிய பொருளாதார நிச்சயத்தன்மை நிலவும் சூழலில், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
மக்களின் செயல் கட்சியைச் சேர்ந்த சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன், நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தல் வாக்கெடுப்பு வரும் மே 3-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
93 இடங்களைக் கொண்ட சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்குக் கடைசியாக 2020-ல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. நீண்டகாலமாக ஆட்சியில் இருக்கும் மக்களின் செயல் கட்சி 83 இடங்களை வென்றது. இதன் மூலம், சிங்கப்பூர் தேசத் தந்தையாக அறியப்படும் லீ குவான் யூவின் மகனும், 2004 முதல் அந்நாட்டின் பிரதமராக உள்ள லீ லூங் 5-வது முறையாக மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
இதைத் தொடர்ந்து, 6-வது முறையாக பிரதமர் பதவிக்குப் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துவிட்டு, 2024-ல் தன் பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதன்பிறகு, லாரன்ஸ் வாங் புதிய பிரதமராகப் பதவியேற்றார்.
நடப்பாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, உலக வர்த்தகத்தை பெரிதும் நம்பியுள்ள சிங்கப்பூர் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துள்ளது. அண்மையில் அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கையால் உலகளாவிய விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், உலக நாடுகளுக்கு இடையே ஏற்றுமதியாகும் பொருட்களைக் கைமாற்றும் முக்கிய மையாக (transshipment hub) விளங்கி வரும் சிங்கப்பூரும் பாதிப்பை சந்தித்துள்ளது. குறிப்பாக, 2025-ம் ஆண்டிற்கான சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியத்திலிருந்து 2 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் என அந்நாட்டின் வர்த்தக அமைச்சகம் கணித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் ஜூலையில் நடைபெறவிருந்த தேர்தலை முன்கூட்டியே நடத்தும் வகையில் நாடாளுமன்றம் முன்னதாகவே கலைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மக்களின் செயல் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், நாட்டின் பொருளாதார நிலைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் இந்த நாடாளுமன்றத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.