அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் உலகின் நுரையீரல் அமேசான்: பின்னணி என்ன?

அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் உலகின் நுரையீரல் அமேசான்: பின்னணி என்ன?

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 38,266 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வருடம் பதிவான காட்டுத் தீ சம்பவங்களை ஒப்பிடும்போது இது இரண்டு மடங்காகும்
Published on

உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகளில் கடந்த 14 வருடங்களில் இல்லாத அளவுக்கு, காட்டுத் தீ சம்பவங்கள் ஆகஸ்ட் மாதத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளன.

தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் அமேசான் மழைக்காடுகள் உலகின் மிகப்பெரிய மழைக்காட்டுப் பகுதியாகும். அமேசான் காடுகளின் 60 சதவீதப் பகுதி பிரேசில் நாட்டுக்குள் உள்ளது. மீதமுள்ள 40 சதவீதப் பகுதி பொலீவியா, கொலம்பியா, ஈக்வடார், பெரு, வெனிசுலா, குயானா போன்ற நாடுகளுக்குள் உள்ளது.

அமேசான் மழைக்காடுகளின் பரப்பளவு ஏறத்தாழ 60 லட்சம் சதுர கி.மீ ஆகும். அமேசான் மழைக்காடுகளில் உள்ள கோடிக்கணக்கான மரங்கள் ஒவ்வொரு வருடமும் உலகின் 20-25 சதவீத கார்பன் வாயுவை உறிஞ்சி ஆக்ஸிஜன் வாயுவை வெளியிடுகின்றன. இந்தக் காரணத்தினால் உலகின் நுரையீரல் என்று அமேசான் அழைக்கப்படுகிறது.

இந்த அமேசான் மழைக்காடுகளில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 38,266 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வருடம் பதிவான காட்டுத் தீ சம்பவங்களை ஒப்பிடும்போது இது இரண்டு மடங்காகும். மேலும் கடந்த 14 வருடங்களில் இல்லாத அளவுக்கு ஆகஸ்ட் மாதத்தில் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்தக் காட்டுத் தீ சம்பவங்களுக்கு இயற்கையுடன் சேர்த்து மனித நடவடிக்கைகளும் மிக முக்கியக் காரணமாகும். கோடைக்காலத்தில் ஏற்படும் வறட்சியால் காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்படுவது வாடிக்கை என்றாலும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை உருவாக்க மனிதர்களால் அமேசான் காட்டுப்பகுதி எரிக்கப்பட்டு வருகிறது.

அமேசானில் நிலவும் வறட்சிக்கு, அதற்கு அருகே உள்ள பசிஃபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்ற சுழற்சியான எல் நினோ நிகழ்வின் தாக்கமும் காரணமாகக் கூறப்படுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in