
ஜார்ஜியா நாட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்துவந்த 11 இந்தியர்கள் உள்ளிட்ட 12 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.
தென்மேற்கு ரஷ்யாவை ஒட்டி அமைந்துள்ளது ஜார்ஜியா. புகழ்பெற்ற காக்கஸ் மலைத்தொடரின் தெற்குப் பகுதியில் இந்த நாடு அமைந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் உள்ள குடௌரி மலைப்பிரதேசத்தில் இருக்கும் இந்திய ஹோட்டலில் பணிபுரிந்துவந்த 11 இந்தியர்கள் உள்ளிட்ட 12 பேரின் உடல் அந்த ஹோட்டலின் 2-வது தளத்தில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை உள்ளூர் அதிகாரிகள் தொடங்கினார்கள். முதற்கட்ட விசாரணையின் முடிவில், மின்சாரம் தடைபட்டதால் ஜெனரேட்டரை பயன்படுத்தியபோது அதில் இருந்து வெளியேறிய கார்பன் மோனாக்ஸைடு வாயுவை சுவாசித்து அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம், 12 நபர்களின் மரணத்திற்கான உரிய காரணத்தைக் கண்டறிய, அவர்களின் உடல்களில் உடற்கூராய்வு மேற்கொள்ள ஜார்ஜியா உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஜார்ஜியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,
`11 இந்தியர்கள் உயிரிழந்த துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு இந்திய தூதரகம் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். இறந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு ஏதுவான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன’.