150 வருடங்களுக்கும் மேலாக உறைவிடப் பள்ளிகள் மூலம் செவ்விந்தியர்களின் கலாச்சாரத்தை அழிக்க முயற்சித்ததற்காக அவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
1800-களின் துவக்கத்தில் தொடங்கப்பட்டு 1960-களின் பிற்பகுதி வரை, சுமார் 150 வருடங்களுக்கும் மேலாக செவ்விந்தியர்களுக்கான உறைவிடப் பள்ளிகள் அமெரிக்க அரசால் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான செவ்விந்திய குழந்தைகளை அவர்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றி, கட்டாயத்தின் பேரில் இந்த உறைவிடப் பள்ளிகளில் சேர்த்தது அமெரிக்க அரசு.
செவ்விந்தியர்களின் பழங்குடி உறவுகளையும், கலாச்சார பழக்கவழக்கங்களையும் அழிக்கும் நோக்கில் இந்தப் பள்ளிகள் செயல்பட்டன. இந்தப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட செவ்விந்திய குழந்தைகளுக்கு புதிய பெயர்கள் சூட்டப்பட்டு, வலுக்கட்டாயமாக அவர்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்தப் பள்ளிகளில் படித்த பல செவ்விந்திய குழந்தைகள் பாலியல் ரீதியிலும், உடல் ரீதியிலும் துன்புறுத்தலுக்கு ஆளாகினர். நடப்பாண்டின் ஜூலை மாதத்தில், 1969 வரையில் இத்தகைய உறைவிடப் பள்ளிகளில் படித்த 19 ஆயிரம் நபர்கள் அமெரிக்க உள்துறையால் அடையாளம் காணப்பட்டனர்.
அரிஸோனா மாகாணத்தில் செவ்விந்தியர் அதிகமாக வசிக்கும் கிலா ரிவர் இந்தியன் ரிசர்வேஷன் பகுதியில் செவ்விந்திய குழந்தைகளுக்காக நடத்தப்படும் கிலா கிராசிங் கம்யூனிட்டி பள்ளிக்குச் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியவை பின்வருமாறு,
`150 வருடங்கள் கழித்து இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் நடைபெற்ற விஷயங்களுக்காக இதுவரை அமெரிக்க அரசு வருத்தம் தெரிவித்தது இல்லை. அமெரிக்க அதிபராக நாங்கள் செய்த விஷயங்களுக்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.