
கனடா டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா ரக விமானம் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளார்கள்.
அமெரிக்காவின் மினியாபோலிஸ் செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, என்டீவர் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான டெல்டா ரக விமானம் 76 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளர்களுடன் கனடா நேரப்படி நேற்று (பிப்.17) காலை 11 மணி அளவில் கிளம்பியது.
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க முற்பட்டபோது, அப்பகுதியில் பனிமூட்டமாக இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஓடுதளத்தில் தரையிறங்கும்போது விமானம் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தால், விமானத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்துள்ளது. காலதாமதமில்லாமல் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து, விமானத்திற்குள் இருந்த 80 நபர்களையும் உயிருடன் மீட்டுள்ளார்கள். இதில், ஒரு குழந்தை உட்பட 18 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவடமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான காயம் யாருக்கும் ஏற்படவில்லை.
அதேநேரம், இந்த டெல்டா ரக விமானம் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதற்கான துல்லியமாக காரணம் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த விபத்து குறித்து அமெரிக்க ஃபெடரல் விமானப் போக்குவரத்து அமைப்பு விசாரணையில் ஈடுபட்டுவருகிறது.