
வியட்நாம் இந்தியாவின் பார் கிழக்குக் கொள்கையிலும், இந்திய-பசிஃபிக் கொள்கையிலும் முக்கியப்பங்கு வகிப்பதாகப் பேசினார் பிரதமர் மோடி. மேலும் இந்திய-பசிஃபிக் பகுதியை முன்வைத்து இரு நாடுகளுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.
3 நாள் அரசு முறைப் பயணமாக ஜூலை 30-ல் இந்தியாவுக்கு வருகை தந்தார் வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் ஷிங். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 1) தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து உரையாடினார் ஃபாம் மின் ஷிங்.
உரையாடலுக்குப் பிறகு இரு நாட்டுப் பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது `எங்களின் பார் கிழக்குக் கொள்கையிலும், இந்திய-பசிஃபிக் கொள்கையிலும் வியட்நாம் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்திய-பசிஃபிக் பகுதியை முன்வைத்து இரு நாடுகளுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு இருக்கிறது. நாங்கள் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறோம், விரிவாக்கத்துக்கு அல்ல’ என்று பேசினார் பிரதமர் மோடி.
மேலும், `கடந்த ஒரு தசாப்தத்தில் எங்களின் உறவுகள் மேலும் விரிவடைந்து, வலுவடைந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் இருநாட்டு உறவுகளையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளோம். எங்களுக்கு இடையேயான வர்த்தகம் 85 சதவீதம் உயர்ந்துள்ளது. எரிசக்தி, தொழில்நுட்பம், கூட்டு முன்னேற்றம் ஆகியவற்றில் எங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது’ என்றார் மோடி.
இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிகழ்வுக்கு முன்பு வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் ஷிங் தில்லியின் ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி தன் மரியாதையைச் செலுத்தினார்.