ஈரான் உச்ச தலைவர் பதுங்கியிருக்கும் இடம் தெரியும்: டிரம்ப் பதிவால் பதற்றம்!

"அவரைக் குறிவைப்பது மிக எளிது. ஆனால்..."
ஈரான் உச்ச தலைவர் பதுங்கியிருக்கும் இடம் தெரியும்: டிரம்ப் பதிவால் பதற்றம்!
1 min read

ஈரான் உச்ச தலைவர் எங்கு இருக்கிறார் என்பது தங்களுக்குத் தெரியும் என்றும் தற்போதைக்கு அவரைக் கொல்லப்போவதில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல், ஈரான் இடையிலான வான்வழித் தாக்குதல் தொடர்ந்து 5 நாள்களாக நடைபெற்று வருகிறது. ஈரான் வசம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதில் இஸ்ரேல் குறியாக இருக்கிறது. இதனால், அணு ஆயுதங்கள் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் நாளுக்கு நாள் பதற்றத்தை அதிகரித்து வரும் நிலையில், தெஹ்ரானைவிட்டு அனைவரும் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தது அச்சுறுத்தலாக அமைந்தது.

கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டிலிருந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு நாள் முன்னதாகவே புறப்பட்டு, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யை சென்றடைந்தார்.

கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டிற்கு இடையே, தன் ட்ரூத் சோஷியல் கணக்கில் டிரம்ப் பதிவிட்டதாவது:

"நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இது ஒரு அவமானகரமான காரியம். எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. இதைத்தான் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்! அனைவரும் உடனடியாக தெஹ்ரானை காலி செய்ய வேண்டும்!" என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, ஈரானின் வான்வழி முழுவதும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக டிரம்ப் பதிவிட்டுள்ளார். மேலும், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பதுங்கியிருக்கும் இடம் தெரியும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"ஈரானின் உச்ச தலைவர் எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது எங்களுக்குத் துல்லியமாகத் தெரியும். அவரைக் குறிவைப்பது மிக எளிது. ஆனால், அவர் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். அவரைக் கொல்லப்போவதில்லை. குறைந்தபட்சம் தற்போதைக்கு கொல்லப்போவதில்லை. அப்பாவி மக்கள் அல்லது அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது ஏவுகணைகள் விழுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் பொறுமையை இழந்து வருகிறோம்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக வெறுமன, "நிபந்தனையின்றி சரண்" என்று மட்டும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் டிரம்ப்.

இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக, ஈரான் உச்ச தலைவரைக் கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாகவும் டிரம்ப் இதைத் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல் வெளியானது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in