`ஒரு புதிய அத்தியாயத்துக்காக அமெரிக்கா தயாராகிவிட்டது. அதிபர் கமலா ஹாரிஸுக்காக நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் மாநாட்டில் பேசியுள்ளார் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
2009 முதல் 2017 வரை இரண்டு முறை அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த பராக் ஒபாமா, அந்நாட்டின் முதல் கறுப்பின அதிபராவார். அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸை ஆதரித்துப் பேசிய ஒபாமா, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை கடுமையாக விமர்சித்தார்.
சிகாகோ மாநாட்டில் பேசிய ஒபாமா, `உங்களை பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் நெருப்பாக உணர்கிறேன். ஒரு புதிய அத்தியாயத்துக்கு அமெரிக்கா தயாராகிவிட்டது. ஒரு நல்ல கதைக்கு அமெரிக்கா தயாராகியுள்ளது. அதிபர் கமலா ஹாரிஸுக்காக நாங்கள் தயாராக இருக்கிறோம். உலகத்தின் காவல்காரனாக நாம் இருக்கமுடியாது.
உலகத்தில் நடைபெறும் ஒவ்வொரு அநீதியான செயலையும் நாம் ஒழிக்க முடியாது. ஆனால் அமெரிக்காவால் ஒரு நல்ல சக்தியாக திகழ முடியும். அமெரிக்க அதிபர் தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும். வாக்காளர்கள் யார் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவருக்காக உறுதியாகப் போராட வேண்டும்.
இதில் அமெரிக்க மக்கள் எந்த தவறும் செய்துவிடக்கூடாது. கமலா ஹாரிஸுக்கு அமெரிக்கா ஒரு வாய்ப்பளித்துள்ளது. அவரது அர்ப்பணிப்பை நாம் அங்கீகரிக்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கூச்சல், குழப்பமான நான்கு வருடங்கள் எங்களுக்குத் தேவையில்லை’ என்றார்.