யாரையும் நாங்கள் எதிர்க்கவில்லை: குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி

மனித குலத்துக்கு அவசியமான ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில் குவாட் செயல்படுகிறது
யாரையும் நாங்கள் எதிர்க்கவில்லை: குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
ANI
1 min read

`நாங்கள் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்குமுறையை ஆதரிக்கிறோம், யாரையும் நாங்கள் எதிர்க்கவில்லை’ என்று அமெரிக்காவில் நடந்த குவாட் உச்சி மாநாட்டில் உரையாற்றியுள்ளார் பிரதமர் மோடி.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட குவாட் கூட்டமைப்பின் உச்சிமாநாடு அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் இன்று (செப்.22) நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், ஜப்பான் பிரதமர் ஃபியூமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியவை பின்வருமாறு:

`மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற பிறகு குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். 2021-ல் குவாட் கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்தக் குறுகிய காலகட்டத்தில் நம்மிடையேயான ஒத்துழைப்பை அனைத்து திசைகளிலும் விரிவாக்கம் செய்துள்ளோம்.

மோதல்களும், பதற்றங்களும் உலகை சூழ்ந்திருக்கும் வேளையில் குவாட் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த நேரத்தில் மனித குலத்துக்கு அவசியமான ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில் குவாட் செயல்படுகிறது. யாருக்கும் நாங்கள் எதிராக இல்லை.

விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்குமுறை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு, அமைதியான வழியில் பிரச்னைகளுக்கான தீர்வு ஆகியவற்றை நாங்கள் ஆதரிக்கிறோம். திறந்த, செழிப்பான, அனைவருக்குமான இந்திய-பசிஃபிக் பகுதிக்காக நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.

உதவி செய்ய குவாட் எப்போதும் இருக்கும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். 2025-ல் குவாட் உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in