கடந்த ஆகஸ்ட் 25-ல் லெபனானில் இருந்து இஸ்ரேலுக்கும், இஸ்ரேலில் இருந்து லெபனானுக்கும் பரஸ்பரம் வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்றன. இதை முன்வைத்து, மூன்றாம் உலகப்போரை நோக்கிச் செல்கிறோம் என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் டொனால்ட் டிரம்ப்.
கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீனின் காஸாவில் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் போர் தீவிரமடைந்துள்ள வேளையில், லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே வான்வழித் தாக்குதல்கள் நடைபெறுவது மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இது குறித்து தன் எக்ஸ் வலைதளக் கணக்கில், `மத்திய கிழக்கில் எங்களுக்காக பேச்சுவார்த்தை நடத்துவது யார்? எல்லா இடங்களிலும் குண்டுகள் வீசப்படுகின்றன. ஜனநாயகக் கட்சியினரால் வெளியேற்றப்பட்ட ஜோ பைடன் கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு கடற்கரையில் தூங்கிக்கொண்டிருக்கிறார். தன்னுடைய மோசமான துணை அதிபர் தேர்வான டிம்முடன் பேருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார் காம்ரேட் கமலா. மூன்றாம் உலகப் போரை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம், ஆனால் அது நமக்குத் தேவையில்லை’ என்று பதிவிட்டுள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்.
கடந்த 7 அக்டோபர் 2023-ல் தொடங்கி மத்திய தரைக்கடலை ஒட்டிய பாலஸ்தீனின் காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல். இந்தத் தாக்குதலில் இதுவரை 40,435 பொதுமக்கள் மரணமடைந்துள்ளதாகவும், 93,534 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பாலஸ்தீன் அகதிகளுக்கான ஐநா அமைப்பு, மத்திய காஸாவில் உள்ள 18 கிணறுகளில் மொத்தம் 3 கிணறுகளில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன, இதனால் அங்கே 85 % தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்று அறிக்கை அளித்துள்ளது.