நவம்பர் 5-ல் வாக்குப்பதிவு: அமெரிக்க அதிபர் தேர்தல் எவ்வாறு நடைபெறும்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் நேரடியாக அதிபர் வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தமாட்டார்கள்.
நவம்பர் 5-ல் வாக்குப்பதிவு: அமெரிக்க அதிபர் தேர்தல் எவ்வாறு நடைபெறும்?
2 min read

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு வரும் நவ.5-ல் நடைபெறுவதை ஒட்டி, அமெரிக்க நேரப்படி வேட்பாளர்கள் இருவரும் இன்று (நவ.3) தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும். தற்போது 46-வது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரி 20-ல் நிறைவடையவுள்ளது. இதை ஒட்டி, புதிய அமெரிக்க அதிபரைத் தேர்தெடுக்கும் வகையிலான தேர்தல் வாக்குப்பதிவு வரும் நவ.5-ல் (செவ்வாய் கிழமை) நடைபெறவுள்ளது.

பொதுவாகவே, ஒவ்வொரு அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவும், நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய் கிழமையில் நடைபெறும். இதை ஒட்டியே வரும் நவ.5 வாக்குப்பதிவு நாளாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாகவே வாக்குரிமை பெற்றுள்ள பொதுமக்கள் தங்கள் வாக்குகளை செலுத்த முடியும். இதன் அடிப்படையில், நேற்றைய (நவ.2) நிலவரப்படி தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட 6.5 கோடி பொதுமக்கள் தங்களின் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

இந்த அதிபர் தேர்தலில் பொதுமக்கள் நேரடியாக அதிபர் வேட்பாளர்களுக்குத் தங்களின் வாக்குகளை செலுத்தமாட்டார்கள். மாறாக, எலக்டோரல் காலேஜ் என்று அழைக்கப்படும் வாக்காளர் குழுவுக்குத் தங்களது வாக்குகளை செலுத்துவார்கள். இந்த வாக்காளர் குழுவில் மொத்தம் 538 உறுப்பினர்கள் உள்ளனர்.

அமெரிக்காவின் 50 மாகாணங்களுக்கு இடையே, அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த 538 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக அமெரிக்காவின் மிகப் பெரிய மாகாணமாக கலிஃபோர்னியாவில் 55 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதன்படி, 270 வாக்காளர் குழு உறுப்பினர்களின் ஆதரவைப் பெரும் அதிபர் வேட்பாளரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு, நவம்பர் 5-ல், காலை 7 மணி முதல் 9 மணி வரை 50 அமெரிக்க மாகாணங்களிலும் வெவ்வேறு நேரத்தில் தொடங்கும். நவம்பர் 5-ல் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். பெரும்பாலும் அடுத்த நாள் (நவ.6) அதிகாலையிலேயே தேர்தல் முடிவுகள் தெரியவரும்.

கடந்த 2020 அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பெரும்பான்மை கிடைக்காமல், டொனால்ட் டிரம்புக்கும், ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான இழுபறி நீடித்தது. இதனால் சில நாட்களுக்குப் பிறகே ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. அதேபோல தற்போதைய தேர்தலிலும் இழுபறி நீடிக்கும் எனத் தெரிகிறது.

தேர்தலுக்கு முந்தைய சில கருத்துக்கணிப்புகள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாகவும், வேறு சில கருத்துக்கணிப்புகள் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாகவும் வெளிவருகின்றன. இருந்தாலும், இருவருக்கும் இடையிலான வாக்கு சதவீதத்தின் வித்தியாசம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதனால் தற்போதைய தேர்தலிலும் உறுதியான தேர்தல் முடிவுகள் வெளியாக சில நாட்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in