
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் இன்று (ஆக 7) தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள தோவல் புதின் வருகைக்கான தேதிகளைக் குறிப்பிடவில்லை. ஆனால் ஆகஸ்ட் மாத இறுதியில் இது நடக்க வாய்ப்புள்ளதாக இன்டர்ஃபாக்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அஜித் தோவல் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
`எங்களுடன் ஒரு சிறப்பான, நீண்ட கால உறவு உள்ளது, மேலும் இந்த உறவை நாங்கள் மதிக்கிறோம். எங்களுக்குள் உயர்மட்ட அளவில் ஈடுபாடு உள்ளது, மேலும் இந்த உயர்மட்ட ஈடுபாடுகள் மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. அதிபர் புதினின் இந்திய வருகை குறித்து அறிந்து நாங்கள் மிகவும் உற்சாகமடைந்து, மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
தேதிகள் இப்போது கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன்’ என்றார்.
22-வது ரஷ்யா-இந்தியா வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக ஜூலை 2024-ல் மாஸ்கோவிற்கு சென்றபோது, இந்தியா வருமாறு பிரதமர் நரேந்திர மோடி புதினுக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து மே 2025-ல் மீண்டும் மோடி அழைப்பு விடுத்ததை ரஷ்ய அரசு உறுதிப்படுத்தியது.
டிரம்ப் - புதின் சந்திப்பு
வரும் நாட்களில் அதிபர் புதினும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்திக்கவுள்ளார் என்று ரஷ்ய அரசாங்க வட்டாரம் இன்று (ஆக. 7) கூறியுள்ளது.
குறிப்பாக, இரு தரப்பினரும் ஒரு சந்திப்பை ஏற்படுத்துவதில் பணியாற்றி வருவதாகவும், சந்திப்புக்கான இடம் குறித்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ரஷ்ய அதிபரின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் கூறினார்.