வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவைச் சிறைபிடித்து நாடுகடத்தி உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அதன் காரணமாக அந்நாட்டின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும், வெனிசுலா ஆட்சியாளர்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். குறிப்பாக வெனிசுலா போதைப்பொருள் கடத்தல் மையமாகச் செயல்பட்டு வருவதாக டிரம்ப் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால் வெனிசுலா நாடு அதனை மறுத்துள்ளது.
வெனிசுலா மீது திடீர் தாக்குதல்
இதற்கிடையில் இன்று திடீரென வெனிசுலா தலைநகர் கராகஸ்சில் அமெரிக்க விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் குண்டு வீசி தாக்குதலை தொடங்கின. ராணுவ தளங்கள், பாதுகாப்புத்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலை அமெரிக்க ராணுவம் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நிலையில், வெனிசுலா மீதான அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல், ஐநா விதிமுறைகளுக்கு எதிரானது. சர்வதேச அமைதியை குலைக்கும் செயல் என்று வெனிசுலா வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.
வெனிசுலா அதிபர் சிறைபிடிப்பு
இதைத் தொடர்ந்து வெனிசுலா அதிபரைச் சிறைபிடித்து நாடு கடத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக ஊடகப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
“வெனிசுலாவிற்கும் அதன் தலைவர் நிக்கோலஸ் மதுரோவிற்கும் எதிராக அமெரிக்கா ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது, அவர் தனது மனைவியுடன் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இது அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளின் உதவியுடன் நடத்தப்பட்டிருக்கி்றது. விரிவான விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும். காலை 11 மணி அளவில் இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
நிக்கோலஸ் மதுரோ இருப்பிடம் தெரியவில்லை
மதுரோ கைது செய்யப்பட்டதாக டிரம்ப் அறிவித்த நிலையில், “வெனிசுலா மீது அமெரிக்கா ஒரு மிகப் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியதால், அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் இருப்பிடம் குறித்து தகவல் தெரியவில்லை. அவர்கள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களைக் கோருகிறோம்” என்று வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில் உடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
US President Trump has announced that the country's President Nicolas Maduro has been captured and deported as the United States continues its attack on Venezuela.