
உலகின் மிகப்பெரிய லாப நோக்கமற்ற டிஜிட்டல் நூலகமாக, `இணைய காப்பகம்’ (internet archive) கடுமையான சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.
1996-ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இணைய காப்பகம் லாப நோக்கமற்ற ஒரு டிஜிட்டல் நூலகமாக செயல்பட்டு வருகிறது. இணையதளப் பக்கங்கள், மென்பொருட்கள், இசைக் கோர்வைகள், காணொளிகள், புகைப்படங்கள், அச்சுப் புத்தகங்கள் என லட்சக்கணக்கான தொகுப்புகளை உலகம் முழுவதும் உள்ள இணைய பயன்பாட்டாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது இணைய காப்பகம்.
இந்நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக இணைய காப்பகத்தின் இணையதளங்கள் மீது தொடர்ந்து சைபர் தாக்குதல் தொடுக்கப்பட்டு வருவது தற்போது தெரியவந்துள்ளது. இந்த சைபர் தாக்குதலின் மூலம் இணைய காப்பகத்தின் 3.1 கோடி தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன. இதில் மின்னஞ்சல் முகவரிகள், கடவுச் சொற்கள் போன்ற இணைய காப்பகத்தின் பயனர்கள் குறித்த தகவல்கள் அடக்கம்.
சைபர் தாக்குதல்கள் குறித்து இணைய காப்பகத்தின் நிர்வாகம் முதலில் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதன் பயனாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு இந்த சைபர் தாக்குதல்கள் குறித்து மர்ம நபர்கள் மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளனர். இதை அடுத்தே இந்த விவகாரம் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடர்ச்சியான சைபர் தாக்குதலை எதிர்த்து இணைய காப்பகத்தின் ஊழியர்கள் இரவு பகல் பாராமல், தளங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முயற்சிசெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.