
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் பொதுமக்கள் கூட்டத்துக்குள் பிக்-அப் டிரக் பாய்ந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவத்தை முன்வைத்து அமெரிக்கா உடைந்து கொண்டிருப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார் புதிய அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்.
நேற்று (ஜன.1) லூசியான மாகாணத்தில் இருக்கும் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள போர்பன் வீதியில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகக் கூடியிருந்த பொதுமக்களில் ஒரு பகுதியினர் மீது பிக்-அப் டிரக் ஒன்று மோதியது.
இதனைத் தொடர்ந்து, டிரக்கில் இருந்து இறங்கிய ஓட்டுனர் அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் அந்த ஓட்டுனர் உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக எஃப்.பி.ஐ. நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த ஓட்டுனரின் பெயர் ஷம்ஷுதின் ஜபார் என்பதும், அவர் அமெரிக்காவின் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த டிரக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கொடியும் இருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாகக் கடுமையாக விமர்சித்து ட்ரூத் சோசியல் சமூக வலைதளக் கணக்கில் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,
`திறந்த எல்லைகளுடன் வலுவில்லாத, பயனற்ற தலைமை இருக்கும்போது இதுதான் நடக்கும். நீதித்துறை, எஃப்.பி.ஐ., ஜனநாயக அரசு, உள்ளூர் பிரதிநிதிகள் தங்களது பணிகளை மேற்கொள்ளவில்லை.
அவர்கள் திறமையற்றவர்கள், ஊழல்வாதிகள், அவர்கள் விழித்திருந்த நேரம் முழுவதும் வெளியிலிருந்து தொடுக்கப்படும் தாக்குதல்களில் இருந்து அமெரிக்கர்களைப் பாதுகாப்பதை விட்டுவிட்டு, (அவர்களின்) அரசியல் எதிரியான என்னைத் தாக்குவதிலேயே நேர்த்தை செலவிட்டுள்ளனர். நமது அரசாங்கத்தின் அனைத்துப் படிநிலைகளிலும் வன்முறை அழுக்கு ஊடுருவியுள்ளது.
நம் நாட்டுக்கு இவ்வாறு நடந்துள்ளதை அனுமதித்ததற்காக ஜனநாயகக் கட்சியினர் வெட்கப்படவேண்டும். மிகவும் தாமதமாவதற்கு முன்பு, (விசாரணையில்) சி.ஐ.ஏ. பங்குபெற வேண்டும். அமெரிக்கா உடைந்துகொண்டிருக்கிறது. சக்திவாய்ந்த, பலமான தலைமையால் மட்டுமே இதை நிறுத்தமுடியும். ஜனவரி 20-ல் உங்களை சந்திக்கிறேன்’ என்றார்.