
உக்ரைனுக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்துவித ராணுவ உதவிகளையும் நிறுத்துவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, உக்ரைன் நாட்டிற்கு வழங்கி வந்த அனைத்துவித ராணுவ உதவிகளையும் நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவுடன் உக்ரைன் போரில் ஈடுபட்டுவரும் வேளையில், அதிபர் டிரம்பின் அறிவுறுத்தலின் பேரில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பெட்டே ஹெக்செத் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ரஷ்யாவுடன் சமாதானமாக செல்லுமாறு, உக்ரைனுக்கு அமெரிக்க அரசு அழுத்தம் கொடுத்துவரும் வேளையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி ஒருவர், `நிரந்தரமாக உதவியை நிறுத்தவில்லை, இது தற்காலிகமான நடவடிக்கையே’ என்றார். அதேநேரம், உக்ரைனுக்கு வழங்கும் வகையில், போலாந்து உள்ளிட்ட பிற நாடுகளிலும், கப்பல்களிலும் வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் திரும்பப் பெறப்படுகின்றன.
மூன்றாண்டுகளுக்கு முன்பு ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதும், 175 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவிகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது. கடந்த டிசம்பரில், கூடுதலாக 5.9 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவியை உக்ரைனுக்கு வழங்க ஒப்புதல் அளித்தார் அதிபர் ஜோ பைடன்.
தனிமங்கள் தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தை இறுதி செய்யவும், ரஷ்யாவுடனான போர் நிறுத்தம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவும் கடந்த வாரம் அமெரிக்கா சென்று அதிபர் டிரம்பை சந்தித்தார் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி.
ஆனால் அமைதியாக தொடங்கிய பேச்சுவார்த்தை, காரசாரமான விவாதமாக உருமாறி, பாதியிலேயே வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் ஸெலென்ஸ்கி. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஆதரவு எங்களுக்கு அவசியம் என்று கருத்து தெரிவித்திருந்தார் அதிபர் ஸெலென்ஸ்கி. இந்நிலையில், இராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.