ஈரான் உச்ச தலைவரைக் கொல்லும் திட்டத்தைத் தடுத்தாரா டிரம்ப்?

நாங்கள் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம் என்றார் நேதன்யாகு.
ஈரான் உச்ச தலைவர்
ஈரான் உச்ச தலைவர்REUTERS
1 min read

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியைக் கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதைத் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெள்ளிக்கிழமை முதல் சண்டை நடைபெற்று வருகிறது. ஈரானின் அணு ஆயுதம் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மூலம் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்தச் சண்டைக்கு நடுவே, ஈரான் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கப் படைகள் மற்றும் அமெரிக்கப் படைத் தளங்கள் உதவியதற்கான திடமான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்தார்.

இதனிடையே, ஈரான் உச்ச தலைவரைக் கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாகவும் டிரம்ப் இதைத் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் இருவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ஈரான் மீது இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை நடத்தத் தொடங்கியது முதல் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பிலிருந்து வருகிறார்கள் என்றார்கள்.

ஈரான் தலைவரைக் கொல்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக இஸ்ரேலியர்கள் கூறியதாகவும் டிரம்ப் இத்திட்டத்தை கைவிட வைத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இருந்தபோதிலும், டொனால்ட் டிரம்ப் நேரடியாக இத்திட்டத்தைக் கைவிடச் சொன்னாரா அல்லது டிரம்ப் சார்பில் அதிகாரிகள் மூலம் தகவல் அனுப்பப்பட்டதா என்பது உறுதிபடத் தெரியவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அடிக்கடி தொடர்பிலிருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்கள்.

இத்தகவல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிடம் ஃபாக்ஸ் நியூஸ் சார்பில் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், "உரையாடல்கள் குறித்து நிறைய தவறான தகவல்கள் வெளியாகின்றன. அதற்குள் நான் செல்லவில்லை" என்றார்.

மேலும், நாங்கள் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம் என்றார் நேதன்யாகு. அதேசமயம், அமெரிக்காவுக்கு எது நல்லது என்பது அமெரிக்காவுக்குத் தெரியும் என்றும் நேதன்யாகு விளக்கமளித்தார்.

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் ஈரானில் மொத்தம் 224 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 1,277 பேர் காயமடைந்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in