
உலக நாடுகளுக்கு எதிரான பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 26 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மீது அந்நாடுகளில் விதிக்கப்படும் அதிகப்படியான வரிகளுக்கு ஈடாக, அந்நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது பரஸ்பர வரி (reciprocal tariff) விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சுமார் 25 நாடுகள் மீது அமெரிக்காவால் விதிக்கப்படவுள்ள புதிய வரிகள் தொடர்பான அறிவிப்பை அதிபர் டிரம்ப் நேற்று (ஏப்ரல் 2) வெளியிட்டார்.
இந்த நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் மீது ஏப்ரல் 5 முதல், ஒரே அளவில் 10 சதவீத வரிகள் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, நாடுகளைப் பொறுத்து இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 9-ல் இருந்து கூடுதல் வரிகள் விதிக்கப்படவுள்ளன.
இதன் அடிப்படையில், ஏப்ரல் 9-ல் இருந்து இந்திய இறக்குமதிகள் மீது கூடுதலாக 16 சதவீத வரி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஒட்டுமொத்தமாக இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி 26 சதவீதமாக இருக்கும்.
அதேநேரம், கம்போடியா பொருள்கள் மீது 49 சதவீதமும், வியட்நாம் பொருள்கள் மீது 46 சதவீதமும், வங்கதேச பொருள்கள் மீது 37 சதவீதமும், தாய்லாந்து பொருள்கள் மீது 36 சதவீதமும், சீன பொருள்கள் மீது 34 சதவீதமும், ஜப்பான் பொருள்கள் மீது் 24 சதவீதமும் வரிகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அந்த வகையில், பிற ஆசிய நாடுகளை ஒப்பிடும்போது ஜப்பான் மீதான வரிகள் குறைவாகும்.