

பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளும்போது அமெரிக்காவும் நடத்தத்தான் வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்கைக் கடந்த வாரம் சந்தித்தார். இது உலக அரசியலில் முக்கியத்துவம் பெற்ற நிலையில், பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்துவதாக அவர் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
நேற்று (நவ.2) அமெரிக்க அதிபர் டிரம்ப் சிபிஎஸ் நியூஸுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் அணு ஆயுத சோதனையை 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா மீண்டும் மேற்கொள்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
“ரஷ்யாவும் சீனாவும்தான் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறார்கள். அவர்கள் அதைப் பற்றி பேசுவதில்லை. ஆனால் நாம் திறந்த சமூகம். நாம் வேறுபட்டவர்கள். நாம் அணு ஆயுத சோதனைகளை நடத்தினால் நாட்டுக்குத் தெரியப்படுத்துவோம்.
வட கொரியாவும் பாகிஸ்தானும் தங்கள் அணு ஆயுதங்களைச் சோதித்துப் பார்க்கும்போது அமெரிக்காவும் அணு ஆயுத சோதனை நடத்தியாக வேண்டும். அணு ஆயுத சோதனைகள் மூலம்தான் அமெரிக்க ஆயுத அமைப்புகளின் நம்பகத்தன்மையைப் பரிசோதிக்க முடியும். அவர்கள் எல்லாம் எங்கே எப்போது அணு ஆயுத சோதனை நடத்துகிறார்கள் என்று தெரியாது. ஆனால் சோதனை நடத்தப்படுகிறது என்பது மட்டும் தெரியும்.
அவர்கள் நிலத்திற்கு அடியில் அணு ஆயுதங்களைப் பரிசோதிக்கிறார்கள். அதனால் மக்களுக்கு அது தெரியாது. லேசான அதிர்வுகளை மட்டுமே உணர முடியும். உலகத்தையே 150 முறை முழுவதுமாக சிதறடிக்கும் அளவிலான அணு ஆயுதங்களை வைத்திருக்கிறோம். ஆனால், அமெரிக்கா மட்டும்தான் அணு ஆயுத சோதனை நடத்தாத நாடாக இருக்கிறது. அதில் எனக்குச் சம்மதமில்லை. ரஷ்யாவிடமும் சீனாவிடமும் கூட கணிசமான அணு ஆயுதங்கள் உள்ளன. சமீபத்தில் இரு நாட்டுத் தலைவர்களையும் சந்தித்தபோது அணு ஆயுத குறைப்பு குறித்து வலியுறுத்தினேன்.” என்றார்.
இதற்கிடையில் அணு ஆயுதங்களை வெடிக்கச் செய்து சோதனை நடத்தப்படுமா என்ற அச்சத்திற்கு, அமெரிக்க எரிசக்தித் துறை செயலாளர் கிறிஸ் ரைட் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
“அமெரிக்காவில் அணு ஆயுதங்களை வெடிக்க வைத்து எந்தச் சோதனையும் நிகழ்த்தப்படாது. சமமான அளவில் அணு ஆயுத அமைப்புகளை மட்டுமே பரிசோதிக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதிலும் வெடிப்புகள் நிகழும் என்றாலும் அவை அணு ஆயுத சோதனைகள் அல்ல. அணு ஆயுதங்களைத் தாங்கும் ஆயுத அமைப்புகளின் துல்லியம் மட்டுமே முதற்கட்டமாக சோதனை செய்யப்படவுள்ளன” என்றார்.
21-ம் நூற்றாண்டில் வடகொரியாவைத் தவிர வேறு எந்த நாடும் அணு ஆயுதங்களை வெடிக்க வைத்து சோதனை நடத்தவில்லை என்று கூறப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பேச்சு உலக அரசியல் சூழலில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
US President Donald Trump has claimed that Pakistan is among several countries actively testing nuclear weapons, asserting that this justifies his administration’s decision to resume America’s own nuclear testing