ஈரானில் ஆட்சி மாற்றம்?: டிரம்ப் பதிவால் குழப்பம்!

இந்தத் தாக்குதல் ஈரான் மீதான, ஈரான் மக்கள் மீதான தாக்குதல் அல்ல. ஆட்சி மாற்றத்துக்கான நகர்வும் கிடையாது - மார்கோ ரூபியோ
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

ஈரானில் ஆட்சி மாற்றம் நிகழ்வது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

குறிப்பாக, அமெரிக்காவில் அவருடைய நிர்வாகத்தின் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாடாக இது இருப்பதால் டிரம்பின் பதிவு கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சண்டை நீடித்து வருகிறது. ஈரானில் உள்ள அணு ஆயுதத் திட்டங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஈரானும் ஏவுகணைகளைக் கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தது.

ஈரான் மீதான தாக்குதலில் தங்களுடைய பங்கு எதுவும் இல்லை என டிரம்ப் விளக்கமளித்திருந்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை ஈரானில் உள்ள மூன்று அணு சக்தி நிலையங்களில் அமெரிக்கா வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக ஈரானில் ஆட்சி மாற்றம் நிகழ்வது பற்றியும் தனது சமூக ஊடகத் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். "ஆட்சி மாற்றம் என்று சொல்வது அரசியல் ரீதியாக சரியானது கிடையாது. ஆனால், தற்போதைய ஆட்சியாளர்களால் ஈரானை மீண்டும் மகத்தான ஈரானாக மாற்ற முடியாதபோது, அங்கு ஏன் ஆட்சி மாற்றம் நிகழக் கூடாது?" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

ஈரானில் ஆட்சி மாற்றம் என்பது அவருடைய ஆட்சி நிர்வாகத்துக்கு எதிரான நிலைப்பாடு. ஈரானில் அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சிபிஎஸ் செய்திகளிடம் கூறுகையில், "இந்தத் தாக்குதல் ஈரான் மீதான தாக்குதல் கிடையாது. ஈரான் மக்கள் மீதான தாக்குதல் கிடையாது. ஆட்சி மாற்றத்துக்கான நகர்வும் கிடையாது" என்றார் ரூபியோ.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறுகையில், "இந்தத் தாக்குதல் ஆட்சி மாற்றத்துக்கான தாக்குதல் கிடையாது" என்று செய்தியாளர்களிடத்தில் விளக்கமளித்தார்.

துணை அதிபர் ஜேடி வேன்ஸ் என்பிசி செய்தியிடம் பேசுகையில், "ஈரானில் ஆட்சி மாற்றம் தேவையில்லை என்ற எங்களுடைய பார்வை தெளிவாக உள்ளது. அவர்களுடைய அணு சக்தித் திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பம்" என்றார் வேன்ஸ்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in