அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகல்

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிவிக்க பைடன் பரிந்துரை.
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகல்
1 min read

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அதிபரும், ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் டிசம்பரில் முடிவடைகிறது. புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பரில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அதிபர் ஜோ பைடன், குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார்கள்.

இந்தத் தேர்தலில் அதிபர் ஜோ பைடனுக்கான செல்வாக்கு குறைவாக இருப்பதாகவும், வெற்றி வாய்ப்பு டிரம்புக்கே அதிகம் இருப்பதாகவும் விமர்சனங்கள், பேச்சுகள் எழுந்தன. அதிபர் தேர்தலுக்கானப் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகுவது தொடர்பாக ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே அழுத்தங்கள் வரத் தொடங்கின.

டிரம்புடன் நடைபெற்ற விவாதத்தில் தடுமாறியது, டிரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்டது என சூழல்கள் அனைத்தும் பைடனுக்கு எதிராக மாறியது. பைடனுக்கு அழுத்தங்கள் கூடின.

இந்த நிலையில், அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். நாட்டு நலனுக்காகவும், கட்சி நலனுக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த முடிவு குறித்து வரும் வாரத்தில் நாட்டு மக்களிடம் விரிவாக உரையாற்றவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்த முடிவைத் தொடர்ந்து, அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிவிக்க, ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். "2020-ல் துணை அதிபராக கமலா ஹாரிஸைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய முதல் முடிவு. நான் எடுத்ததிலேயே இதுதான் மிகச் சிறந்த முடிவு. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸை நிறுத்துவதற்கான எனது முழு ஆதரவை நான் அளிக்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்து டிரம்பை வீழ்த்துவதற்கான நேரம் இது" என்று பைடன் குறிப்பிட்டுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in