
இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் இதர வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு இரண்டாம் நிலை அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
அமெரிக்க குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அவர்களுக்கான பாதுகாப்பை மனதில் கொண்டு 4 நிலைகளில் பயண அறிவுறுத்தல்களை வழங்கும். இதன்படி, இந்தியாவுக்கு வருபவர்களுக்கு இரண்டாம் நிலை பயண அறிவுரையை வழங்கியுள்ளது. சில பகுதிகளில் குற்றச் சம்பவங்கள், பயங்கரவாதச் செயல்கள், உள்நாட்டு பதற்றங்கள் போன்றவை இருக்கலாம் என்பதால் கூடுதல் கவனத்துடன் இருந்து செயல்பட வேண்டும் என அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தலம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பாலியல் வன்புணர்வு உள்பட வன்முறைச் செயல்கள் அதிகரித்திருப்பதாக அமெரிக்காவின் சமீபத்திய அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு இடங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், போக்குவரத்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கணிக்க முடியாத பயங்கரவாத அச்சுறுத்தலுக்கான எச்சரிக்கைகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் மற்றும் அசாதாரண சூழல் காரணமாக கிழக்கு லடாக் மற்றும் லே தவிர்த்து ஜம்மு-காஷ்மீர் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையின் தெற்குப் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு 10 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நக்சலைட் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் கிழக்குப் பகுதி மற்றும் மத்தியப் பகுதியில் சில இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது அமெரிக்கா. மணிப்பூரில் இரு தரப்புக்கும் இடையே வன்முறை வெடித்து வருவதால், அங்கு செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.