
அமெரிக்காவைத் தாக்கினால், அமெரிக்காவின் மொத்தப் படையும் முன்னெப்போதும் கண்டிராத வகையில் தங்களை நோக்கி வரும் என ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை ஒழிக்க ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஈரானின் அணு ஆயுதத் திட்டம் தொடர்புடைய இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. குறிவைக்கப்பட்ட இலக்குகளில் ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம், எஸ்பிஎன்டி அணு ஆயுதத் திட்டத்தின் தலைமையகம் மற்றும் கூடுதல் இலக்குகள் அடங்கும் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுபற்றி தெரிவித்துள்ளதாவது:
"ஈரான் மீது இன்றிரவு நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை. ஈரானால் எந்த வகையிலும் அமெரிக்கா தாக்கப்பட்டால், இதுவரை கண்டிராத வகையில் அமெரிக்காவின் மொத்தப் படைகளும் உங்களை நோக்கி வரும். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சுலபமாக பேச்சுவார்த்தை நடத்தி இச்சண்டையை முடிவுக்குக் கொண்டு வரலாம்" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஓமனில் 6-ம் கட்ட அணு ஆயுதப் பேச்சுவார்த்தை ஞாயிறன்று நடைபெறவிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. ஓமன் வெளியுறவு அமைச்சர் இத்தகவலை உறுதி செய்தார்.
முன்பு, இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் ஜெருசேலம் உள்ளிட்ட நகரில் அபாய எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டுள்ளது.