
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து ஜோ பைடன் விலகினார். பதவியில் இருந்து விலகியது முதல் வயது மூப்பால் அவர் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து பரிசோதனைக்காக மருத்துவமனையில் ஜோ பைடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிசோதனைக்குப் பிறகு எலும்புகளுக்குப் பரவியுள்ள தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு அவருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் பாதிப்பு தீவிரமாக இருக்கும்போதிலும், ஹார்மோன் சிகிச்சை மூலம் பாதிப்பை கையாள சாத்தியக்கூறுகள் உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.
சிறந்த சிகிச்சைத் திட்டத்தை முடிவு செய்ய, பைடனும் அவரது குடும்பத்தினரும் தற்போது மருத்துவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். வயது மற்றும் புற்றுநோயின் முற்றிய நிலை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் அறுவை சிகிச்சைக்கு மாற்றாக ஹார்மோன் சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் மருத்துகள் ஆகியவற்றின் மூலம் புற்றுநோயின் தாக்கத்தை தாமதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட மருத்துவர்கள் முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.