அமெரிக்காவில் பணி அனுமதிகள் இனி தாமாகப் புதுப்பிக்கப்படாது: உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவிப்பு | US Work Permit |

தொழிலாளர்களின் பின்னணி சோதனைகள், தரவு சரிபார்ப்புகளுக்குப் பின் அனுமதி வழங்க முடிவு....
வெள்ளை மாளிகை (கோப்புப்படம்)
வெள்ளை மாளிகை (கோப்புப்படம்)ANI
1 min read

அமெரிக்காவில் பணி அனுமதி ஆவணங்களைத் தானியங்கி முறையில் நீட்டிக்கும் வசதியை ரத்து செய்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

அமெரிக்கா தனது குடியேற்றக் கொள்கைகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி பணிபுரிவதற்கான எச்-1பி விசாக்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, விசா பெறும் கட்டணம் 1 லட்சம் டாலராக உயர்த்தப்பட்டது. இதனால் அமெரிக்காவுக்குப் பணியாளர்களை அனுப்பும் இந்திய நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.

இந்நிலையில், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணி அங்கீகார ஆவணங்களைத் தானியங்கி முறையில் நீட்டிக்கும் வசதியை ரத்து செய்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை இன்று (அக்டோபர் 30) முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அக்டோபர் 30-க்குப் பிறகு பணி அங்கீகார ஆவணங்களின் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும் குடியேற்ற தொழிலாளர்களுக்குத், தானியங்கி பணி நீட்டிப்பு வழங்கப்படாது. இனி விண்ணப்பதாரர்களின் பின்னணிச் சரிபார்ப்பும், கூடுதல் பாதுகாப்பு குறித்த ஆய்வும் முழுமையாக நடத்தப்படும். தொடர்ச்சியான சரிபார்ப்புகள் மூலம் நாட்டின் குடியேற்ற சட்டம் மற்றும் சேவைகளுக்கு விரோதமாகக் கண்டறியப்படுபவர்களைப் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேற்ற முடியும் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஆண்டுக்கு 4.5 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் பணி அங்கீகார ஆவணங்களைப் புதுப்பித்து வருகிறார்கள். இதனிடையே, இந்தப் புதிய அறிவிப்பு மூலம் பணி அங்கீகார ஆவணங்களைப் புதுப்பிக்கத் தாமதம் ஏற்பட்டால், விண்ணப்பித்த தொழிலாளர்கள் தங்கள் பணி அனுமதி காலாவதியாகி, வேலையைத் தொடர முடியாத நிலை ஏற்படும் அபாயமுள்ளது. இது கிரீன் கார்டு வைத்திருப்பவர்களையும் எச்-1பி விசாவில் உள்ளவர்களையும் நேரடியாகப் பாதிக்காது. ஆனால், எச்-1பி விசாவின் துணை ரகமான எச்-4 விசா வைத்திருப்பவர்கள், பட்டப்படிப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் ’விருப்ப நடைமுறை பயிற்சி’ மாணவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோரைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து, பணி அங்கீகார ஆவணங்களின் அனுமதி காலாவதி ஆவதற்கு 180 நாள்களுக்கு முன்னதாகவே தொழிலாளர்கள் புதுப்பித்தல் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அக்டோபர் 30, 2025-க்கு முன் தானாகவே நீட்டிக்கப்பட்ட பணி அங்கீகார ஆவணங்களுக்கு இந்த விதியால் எந்த பாதுப்பும் கிடையாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Summary

The US Department of Homeland Security said the new rule, which comes into effect from today, was enforced for the "proper screening and vetting" of migrants workers before extending their Employment Authorization Documents (EADs).

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in